மீனாட்சியம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த கோரி வழக்கு.. பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விரைந்து குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்கில் கோயில் சொத்துக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு, முறையாக பராமரித்து, கோயில் புதுபிப்பு பணிகளை முடித்து விரைவில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 2021ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோயில் சொத்துக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிய நிலையில், வரும் வியாழக்கிழமை விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.