2025-26ம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு: நெல்லை மாணவன் முதலிடம், 30ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்
மொத்தம் 72,743 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 29,680 விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்பட்டுள்ளன. இதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவும் வருகிற 30ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அதன்படி, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் 10 இடங்களில், கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசு மாதிரிப் பள்ளி மாணவன் திருமூர்த்தி நீட் தேர்வில் 572 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு மாதிரிப் பள்ளி மாணவன் சதீஷ் குமார் 563 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசு மாதிரிப் பள்ளி மாணவி மதுமிதா 551 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் பாச்சல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மெய்யரசி 547 மதிப்பெண்கள் பெற்று 4ம் இடமும், சென்னை ஆவடி மாதிரி பெண்கள் மேல்நிலைலைப் பள்ளி மாணவி மோனிகா 535 மதிப்பெற்று 5ம் இடமும், கரூர் மாவட்டம் குழித்துறை மேல்நிலைப் பள்ளி மாணவன் 533 பெற்று 6ம் இடமும், தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் நிர்மல்ராஜ் 530 பெற்று 7ம் இடமும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் நிதிஷ் 527 மதிப்பெண் பெற்று 8ம் இடமும், தர்மபுரி அக்ரஹாரம் அரசு மேனிலைப் பள்ளி மாணவன் ஜெகதீஷ் 520 மதிப்பெண் பெற்று 9வது இடமும், சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் நிர்மல் 519 பெற்று 10ம் இடமும் பிடித்துள்ளனர்.
இதையடுத்து, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 10 பேர் டாப் இடங்களை பிடித்துள்ளனர். அதன்படி, திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவன் சூரிய நாராயணன் நீட் தேர்வில் 665 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஸ்ரீசைதன்யா டெக்னோஸ்கூல் மாணவன் அபினீத் நாகராஜ் 655 பெற்று 2ம் இடமும், அதே பள்ளி மாணவன் ஹிருதிக் விஜய ராஜா 653 மதிப்பெண் பெற்று 3ம் இடமும், திருவள்ளூர் மாவட்டம் பஞ்சட்டி வேலம்மாள் பள்ளி மாணவன் ராகேஷ் 650 மதிப்பெண் பெற்று 4ம் இடமும், செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீகிரிஷ் இன்டர்நேஷ்னல் பள்ளி மாணவன் பிரஜன் ஸ்ரீவாரி 647 மதிப்பெண் பெற்று 5ம் இடமும், விருதுநகர் லிங்கா குலோபல் பள்ளி மாணவன் நிதிஷ்பாபு 642 மதிப்பெண் பெற்று 6ம் இடமும்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் ஏகேடி மெமோரியல் வித்யா சாகத் பள்ளி மாணவன் கைலேஷ்கிரண் 641 மதிப்பெண்கள் பெற்று 7ம் இடமும், சென்னை மேற்கு ஜாபகர்கான் பேட்டை ஸ்ரீகிரிஷ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் நிதின் கார்த்திக் 640 மதிப்பெண் பெற்று 8ம் இடமும், மேலயம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா மாணவன் பிரகதீஷ் சந்திரசேகர் 640 மதிப்பெண் பெற்று 9ம் இடமும், வேலம்மாள் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி மாணவி பொன் ஷாரினி 639 மதிப்பெண்கள் பெற்று 10ம் இடமும் பிடித்துள்ளனர்.
* கிட்னி முறைகேடு குறித்து ஐஏஎஸ் தலைமையிலான குழு விசாரணை
நாமக்கல்லில் முறைகேடாக கிட்னி விற்பனை செய்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தற்போது மட்டும் அல்ல, கடந்த 2019ம் ஆண்டும் இதேபோன்று ஒருமுறைகேடு சம்பவம் அங்கு நடந்துள்ளது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தற்போது பரப்புரையில் கிட்னி திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாக பேசி வருகிறார்.
அங்கு நடைபெற்று இருப்பது கிட்னி திருட்டு அல்ல, கிட்னி முறைகேடு சம்பவம். அந்த முறைகேடு சம்பவத்தையும் விசாரிக்க ஐஏஎஸ் தலைமையில் குழு விசாரணை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் முதல்கட்ட விசாரணை தமிழக அரசுக்கு கிடைத்தது. அதனை அடிப்படையாக வைத்து 2 மருத்துவமனைகளின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் 2ம் தேதி நலம் தரும் ஸ்டாலின் என்ற திட்டத்தை சாந்தோம் பள்ளி வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 3 இடங்கள் என தமிழ்நாடு முழுவதும் 1256 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 15 இடங்களில் நடைபெறுகிறது. அந்த முகாம்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிக்கழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில் குமார், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் தேரணிராஜன், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, துணை இயக்குநர்கள் கராமத், சாந்தினி மற்றும் ஷீபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
* 25 பேர் போலி சான்றிதழ் சமர்ப்பிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
மாணவர்களின் சிரமங்களை குறைக்கும் வகையிலும், சரிபார்ப்பு பணிகள் சிறப்பாக நடைபெறும் வகையிலும் விண்ணப்ப பதிவிற்கு நடப்பாண்டில் அதிக கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து அதிக அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் சான்றிதழ்களை சரி பார்த்ததில் 25 மாணவர்கள் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று தரவரிசை வெளியிட்டவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது.