மருத்துவக்கல்லூரி மாணவர்களிடம் பிரேக் கட்டணம் வசூலிக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: செட்டிநாடு மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழகத்தில் படித்த எம்பிபிஎஸ் மாணவன் சரத்குமரன் உள்பட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சில பாடத்தில் தோல்வி அடைந்துவிட்டால் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படும். அப்படி மீண்டும் ஓராண்டு படிக்கும் போது அதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பிரேக்கிங் கட்டணமாக ரூ.2 லட்சம் வரை வசூலிக்கிறார்கள். பிரேக்கிங் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். என்று கோரி இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.கவுதமன், வழக்கறிஞர் ஆர்.சொர்ணவேல் ஆஜராகி, பல்கலைக்கழக மானிய குழு கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிட்டும் பிரேக் கட்டணம் என்று வசூலிப்பது சட்டவிரோதமானது.
அதை ரத்து செய்ய வேண்டும் என்றனர். இதை கேட்ட நீதிபதி, மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் பிரேக் என்ற இடைவெளி கட்டணம் வசூலிப்பது தவறானது. சட்டவிரோதமானது. எனவே, அதை ரத்து செய்கிறேன். இடைவேளை கட்டணம், இதர கட்டணம் வடிவில் கூடுதல் கல்விக் கட்டணத்தை வசூலிக்க கூடாது. கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை தான் வசூலிக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்குள் மனுதாரர்கள் செலுத்திய வைப்புத் தொகையை ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் கல்லூரி திருப்பி தர வேண்டும். 2 வாரங்களில் மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களையும் திரும்ப தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.