மருத்துவ மாபியா
மத்திய பிரதேச மாநிலம் சந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 5 வயதுக்கு உட்பட்ட பல குழந்தைகள் இருமல் மருந்து குடித்து பலியானார்கள். டாக்டர் பிரவீன் சோனி அவர்களுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்துள்ளார். காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கிய ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தில் ஆபத்தான டை எத்திலீன் கிளைக்கால் (டிஇசி) இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த மருந்தை தடை செய்த மத்திய பிரதேச அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி அரசுக்கு கடிதம் எழுதியது.
உடனடியாக களமிறங்கிய தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை நடத்திய ஆய்வில் கோல்ட்ரிப் இருமல் மருந்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட டை எத்திலீன் கிளைகால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனம் நிரந்தரமாக முடக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரை செய்த குழந்தைகள் நல மருத்துவர் பிரவீன் சோனியை மத்தியப் பிரதேச மாநில போலீசார் கைது செய்தனர்.
இந்த மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.ரங்கநாதனை மத்தியப் பிரதேச காவல்துறை சென்னையில் கைது செய்தது. அவர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையும் சோதனையிட்டு வருகிறது. ‘கோல்ட்ரிப்’ மருந்து போல், குஜராத்தைச் சேர்ந்த ரெட்னெக்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த ‘ரெஸ்பி ப்ரெஷ் டி.ஆர்’ மற்றும் ஷேப் பார்மா தயாரித்த ‘ரிலைப்’ ஆகிய மூன்று மருந்துகளில் விஷத்தன்மை வாய்ந்த ‘டைஎத்திலீன் கிளைகால்’ என்ற வேதிப்பொருள் அதிகம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளின் இறப்புக்குக் காரணமான ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை, 10 சதவீதம் கமிஷனுக்காகப் பரிந்துரைத்ததாக டாக்டர் பிரவீன் சோனி ஒப்புக்கொண்டுள்ளார். ரூ.24.54 விலையுள்ள அந்த மருந்தின் ஒரு பாட்டிலுக்கு தனக்கு ரூ.2.54 கமிஷனாக கிடைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘கோல்ட்ரிப்’ போன்ற நிலையான மருந்தளவு கலவை மருந்துகளைப் பரிந்துரைக்கக் கூடாது என கடந்த 2023 டிசம்பரிலேயே ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தும், அதனை மீறி இந்த கொடூரச்செயல் நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் பெரிய மருத்துவ மாபியா வலையமைப்பை அம்பலப்படுத்தியுள்ளது. சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரிக்க டாக்டர்கள், விநியோகஸ்தர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்கள், சுற்றுலாக்கள், கமிஷன் போன்றவற்றை வாரி இறைத்து வருகின்றன. ஒன்றிய அரசு ஏற்கனவே இவற்றிற்கு தடை விதித்திருந்தாலும் இதை கண்காணிக்கவோ, தடுக்கவோ தேவையான நடவடிக்கையை எடுக்காததால் டாக்டர் பிரவீன் சோனி போன்ற விஷகிருமிகள் பெருகி வருகின்றனர்.
கடவுளுக்கு இணையாக நம்பப்படும் மருத்துவர்களில் இதுபோன்ற ஒரு சிலரின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் தலைகுனிவை சந்திக்க நேரிடுகிறது. காலம் தவறி வழங்கப்படும் நீதியும், கடமை தவறிய பின் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் பயனற்றதே. எனவே ஒன்றிய அரசு இனியாவது விழித்துக் கொண்டு இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்காணித்து அதன் தரத்தை மேம்படுத்தவும், மனித உயிர்களை காக்கவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.