மருத்துவத்துறையில் காலிப்பணியிடங்கள் பூஜ்ஜியம் என்கின்ற நிலையில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: மருத்துவத்துறையில் காலிப்பணியிடங்கள் பூஜ்ஜியம் என்கின்ற நிலையில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் தென்சென்னை, மண்டலம் 9 முதல் 15 வரை உள்ள 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி முடித்த சான்றிதழ்களும், ரூ.50,000/- மானியத்திற்கான காசோலைகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திருநங்கைகளுக்கு - திறன் பயிற்சி சென்னை மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மண்டலம் 9 முதல் 15 வரை உள்ள திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி முடித்து அதற்கான சான்றிதழ்களும், மானியத் தொகையாக ரூ.50,000/- காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது.
2008ஆம் ஆண்டு கலைஞர் திருநங்கை, திருநம்பி என்று இச்சமூகத்தினருக்கு பெயர் சூட்டினார்கள். பெயர் சூட்டியது மட்டுமல்லாது இவர்களுக்கான நலவாரியத்தையும் அன்று அமைத்தார்கள். இந்தியாவிலேயே திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்தது என்பது தமிழ்நாட்டில்தான் அது கலைஞர் அவர்களால் தான். முதலமைச்சர் தொடர்ந்து பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த திட்டங்களில் ஒன்றுதான் திருநங்கைகளுக்கு திறன் பயிற்சி வழங்கி அதற்கான் சான்றிதழ்கள் மற்றும் ரூ.50,000/- மானியம் வழங்கிடும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநங்கையர் நலவாரியத்தைப் பொறுத்தவரை திருநங்கையர்களின் நலனைக் காப்பதற்கும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் சமூலநலத்துறை அமைச்சகத்தின் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500/- உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி பயிலும் திருநங்கைகளுக்கு கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம், பிற செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்று அதற்கான சலுகைகளையும் வழங்கி வருகிறது. சிறப்புத் திறமைகளை கொண்ட திருநங்கைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 அன்று திருநங்கைகளுக்கான சிறப்பு விருது ஒன்றும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. திருநங்கைகளின் நலனுக்காக பிரத்யேக சுகாதார நலத்திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அனைத்திலும் குறிப்பாக விருதுநகர், மதுரை, பல்வேறு மாவட்டங்களில் திருநங்கைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
திருநங்கைகள் அவர்களுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு பல்வேறு வெளிநாடுகளில் குறிப்பாக தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சென்று திறமையற்ற மருத்துவர்களால் அல்லது போதுமான வசதிகள் இல்லாத நிலையங்களில் அறுவை சிகிச்சை செய்து ஏராளமான உயிர்கள் பிரிந்திருக்கின்றன. முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு, திருநங்கைகளுக்கென்று அறுவை சிகிச்சை மையங்கள், சிகிச்சை மையங்களை அரசே இன்றைக்கு பல்வேறு இடங்களில் தொடங்கி அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. முதலமைச்சர் கடந்த அக்டோபர் மாதத்தில் சென்னை மற்றும் மதுரையில் அறன் என்கின்ற விடுதியை தொடங்கி வைத்திருக்கிறார்கள். இந்த விடுதியில் திருநங்கைகள் குறுகிய கால இடைவெளியில் தங்கி செல்வதற்குரிய வசதியை அந்த விடுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இரண்டு விடுதிகள் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. திருநங்கைகள் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் சமமான வாய்ப்புகளை பெறுவதற்கும் அவர்களும் நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் ஏதுவாகத்தான் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் மற்ற திருநங்கைகளும் பயன்பெற வேண்டும் என்கின்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. அரசின் மூலம் வழங்கப்படும் இதுபோன்ற திட்டங்களில் பயன்பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம். அந்தவகையில் இன்று 13 பேருக்கு அவர்களின் வாழ்வாதாரம் பெருக இருக்கின்றது. முதலமைச்சர் ரூ.1 இலட்சம் மானியத்துடன் கூடிய பிங்க் நிற ஆட்டோக்கள் வழங்கி இருக்கிறார்கள்.
அதிலும் கூட சைதாப்பேட்டை தொகுதியில் 100 மகளிருக்கான ஆட்டோக்களை பெற்றுத்தருகின்ற போது 18 திருநங்கைகளுக்கு மஞ்சள் நிற ஆட்டோக்கள் நாங்களே ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொடுத்து ரூ.1 இலட்சம் மானியத்துடன் கூடிய மஞ்சள் நிற ஆட்டோக்களை பெற்றுத் தந்திருக்கிறோம். இன்னமும் கூட வேறு பகுதிகளில் உள்ள திருநங்கைகள் யாராவது இருந்து ரூ.1 இலட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை பெற விரும்பினால் எங்களை வந்து அணுகவும். நாங்கள் அவர்களுக்கு பேட்ச் ஓட்டுநர் உரிமம் இலவசமாக பெற்று தந்து அவர்களுக்கு ஆட்டோக்களை பெற்றுத் தர தயாராக இருக்கிறோம். எங்கள் அலுவலகத்தை அணுகி அதற்கான பெயர் பதிவு செய்தால் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.
டித்வா புயல் தொடர்பான கேள்விக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழு நேர பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக மழை தொடங்கியதற்கு பிறகு காய்ச்சல் பாதிப்புகள் என்று ஏதாவது ஒரு பகுதியில் இரண்டு பேருக்கு மேல் வந்தாலே அப்பகுதிகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் முழு நேரமும் மின்சாரம் தடைபடாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னாள் பல்வேறு மருத்துவமனைகளில் அவிநாசி, இராயப்பேட்டை போன்ற மருத்துவமனைகளில் சிறிது மழை பெய்தால் கூட மருத்துவமனைக்குள் மழைநீர் உட்புகுவது என்பது நடைபெறும். தற்போது அந்த நிலை இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏறத்தாழ 14,000 மருத்துவக் கட்டமைப்புகள் இருக்கின்றது. இதில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மழைநீர் தேக்கம் இல்லாமல் இருக்கின்ற நிலை கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
மருத்துவப் பேராசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பான கேள்விக்கு மருத்துவத்துறை வரலாற்றில் கலந்தாய்வு நடத்தி இடமாற்றம் தந்துக் கொண்டிருப்பது, வெளிப்படைத்தன்மையுடன் இந்த அரசில் மட்டும்தான். கடந்த காலங்களில் பணம் கொடுத்தால்தான் மாறுதல் என்ற நிலை இருந்தபோது யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் தற்போது வெளிப்படைத்தன்மையுடன் பணிமாறுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 44,000 மேற்பட்டவர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணிமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாக மருத்துவப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான கோப்பு தயார் செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை ஒப்புதல் பெற்று வந்தவுடன் ஓரிரு நாட்களில் கையெழுத்து பெற்று திரும்ப வந்துவிடும். இதையெல்லாம் ஒரு அறிக்கையாக விடுகிறார்கள் தலைவர்கள்.
விமர்சனம் செய்வது என்பது நல்லதுதான். இது ஒரு சாதாரண நடைமுறை. பதவி உயர்வு கோப்பு என்பது அரசிற்கு சென்று அதற்கு எவ்வளவு கூடுதல் செலவாகும் என்று நிதித்துறை ஒப்புதல் பெற்று வரும். இதற்கு ஒரு மாதம் கூட ஆகும். அதற்குள்ளாகவே ஒரு அறிக்கை வெளியிடுவது என்பது விநோதமாக இருக்கிறது.
மருத்துவத்துறையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு; மருத்துவத்துறையில் ஏதாவது காலிப்பணியிடம் இருக்கிறதா என்று நீங்கள் காட்டவும். இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு பூஜ்ஜியம் காலிப்பணியிடங்கள் என்கின்ற வகையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 2,642 மருத்துவர்கள், 2,347 கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தற்போது 2,147 கிராம சுகாதார செவிலியர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட உள்ளது. 2026 ஆம் ஆண்டு வரை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கின்ற வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். MBBS மருத்துவர்கள் PG என்கின்ற பட்ட படிப்பு படிப்பதற்கும் அல்லது DMS, DME போன்ற இயக்குநரகத்திற்கு மாற்றம் செய்து அனுப்பபடுவார்கள். இதனால் 700 காலிப்பணியிடங்கள் ஏற்படும். அடுத்து மருத்துவர்கள் பணி ஓய்வு பெறுவார்கள். அதனையெல்லாம் கருத்தில் கொண்டு 1100 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமனம் செய்ய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள். இதோடு இத்துறையில் காலிப்பணியிடங்களே இல்லாத நிலை ஏற்படும்.
இதுவரை எந்த ஆட்சிக்காலத்திலும் இதுபோன்ற நிலை ஏற்படுத்தப்படவில்லை. யாரவது பத்திரிக்கையாளர்களுக்கு சந்தேகம் இருந்தால் ஏதாவது ஒரு மருத்துவமனைக்கு நேரில் சென்று அம்மருத்துவமனையில் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் எத்தனை, தற்போது பணியில் இருப்பவர்கள் எத்தனை பேர் என்கின்ற விவரத்தினை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட சமூக அலுவலர் வெ.முத்துச்செல்வி மற்றும் இளநிலை உதவியாளர் திருநங்கை இராதா ஆகியோர் உடனிருந்தனர்.