மருத்துவ பயனாளர்களுக்கு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுத்தால் மருத்துவமனை மீது நடவடிக்கை: மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
சென்னை: மருத்துவ பயனாளர்களுக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் அதிநவீன 1.5 டெஸ்லா எம்ஆர்ஐ கருவி, முழுமையாக தானியங்கும் புற ரத்தக்குழாய் நோயறிதல் கருவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அரசு புனர்வாழ்வு மருத்துவ நிலையம் சார்பாக ரூ.4.56 லட்சம் செலவில் அதிநவீன செயற்கை கால்கள், சக்கர நாற்காலிகள் ஆகிய உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி, “அமைச்சருடன் நிமிர்ந்து நட” முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வளைவான முதுகெலும்பு குறைபாடுகளை அறுவை சிகிச்சை மூலம் சீர் செய்யப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் மூலம் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மருத்துவ பயனாளர்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார் கிடைத்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார் தெரிவிக்க 104 என்ற எண்ணை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி மற்றும் உயர் மருத்துவர்கள் உடனிருந்தனர்.