பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் துணை முதலமைச்சரிடம் வாழ்த்து!
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை, மாநிலங்களுக்கிடையேயான 64 வது தேசிய சீனியர் தடகளப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்ற தமிழ்நாடு தடகள அணியின் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, 64 வது தேசிய சீனியர் தடகளப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்ற தமிழ்நாடு தடகள அணியின் தங்கப்பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் இன்று (25.8.2025) நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். சென்னை நேரு விளையாட்டரங்கில் 20.8.2025 முதல் 24.8.2025 வரை மாநிலங்களுக்கிடையேயான 64 வது தேசிய சீனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு தடகள் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 900 தடகள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட தேசிய சீனியர் தடகளப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 80 தடகள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
11 தங்கப் பதக்கங்கள்;
பெண்களுக்கான 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் செல்வி சே. தனலட்சுமி 2 தங்கப் பதக்கங்களையும், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் செ. தமிழரசு, 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தெ. விஷால், உயரம் தாண்டுதல் போட்டியில் செல்வி கி. கோபிகா, தடியூன்றி தாண்டுதல் போட்டியில் செல்வி இ.பிரனிகா. க. ரீகன் மற்றும் மு. கௌதம், டெக்லத்தான் போட்டியில் எஸ். ஸ்டாலின் ஜோஸ் என வீரர், வீராங்கனைகள் தனிநபர் பிரிவில் மொத்தம் 9 தங்கப் பதக்கங்களை வென்றனர்.மேலும், 4x100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பெண்கள் பிரிவில் செல்வி ரா. பவித்ரா, செல்வி ம. ஏஞ்சல் சில்வியா, செல்வி ரா. அபிநயா, செல்வி சே. தனலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினரும், 4x400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் த. சந்தோஷ், ர. ராஜேஷ், த. யோகேஷ், தெ.விஷால் ஆகியோர் கொண்ட குழுவினரும் தலா ஒரு தங்கப் பதக்கம் வென்றனர்.
9 வெள்ளி பதக்கங்கள்;
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் செல்வி ரா. அபிநயா, 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் க.ராகுல் குமார், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ர. ராஜேஷ், 110 MTH தடை ஓட்டம் போட்டியில் ரா. மானவ், உயரம் தாண்டுதல் போட்டியில் ஜோ. ஆதர்ஷன் ராம், 100 மீட்டர் தடை ஓட்டம் போட்டியில் செல்வி கொ. நந்தினி, 400 மீட்டர் தடை ஓட்டம் போட்டியில் செல்வி மை. ஒலிம்பா ஸ்டெஃபி, ஹெப்டத்லான் போட்டியில் செல்வி ச. தீபிகா ஆகிய வீரர், வீராங்கனைகள் தனிப்பிரிவில் மொத்தம் 8 வெள்ளி பதக்கங்களை வென்றனர். மேலும், 4x100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் சி. அருண் குமார், க. ராகுல், ம. வருண், செ. தமிழரசு, வீ. நவீன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஒரு வெள்ளி பதக்கம் வென்றனர்.
11 வெண்கலப் பதக்கங்கள்;
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் க. ராகுல் குமார், 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் திருமதி த. லதா, 3,000 மீட்டர் ஸ்டீபில் சேஸ் போட்டியில் செல்வி எம். அனுபிரியா, 20 கி.மீ நடை ஓட்டம் போட்டியில் செல்வி மு. மோகவி, தடியூன்றி தாண்டுதல் போட்டியில் லோ. கமல் மற்றும் செல்வி த. சத்யா, மும்முறை தாண்டுதல் போட்டியில் சி. பிரவீன், நீளம் தாண்டுதல் போட்டியில் ரா. சுவாமி மற்றும் செல்வி அ. ஷெரின் ஆகிய வீரர், வீராங்கனைகள் தனிப்பிரிவில் மொத்தம் 9 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
மேலும், 4x400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பெண்கள் பிரிவில் செல்வி மை. ஒலிம்பா, செல்வி ச. நிதாலியா, செல்வி வெ. தேசிகா, செல்வி ரா. வித்யா ஆகியோர் கொண்ட குழுவினரும், 4x400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலப்பு பிரிவில் அ. சுராஜ், செல்வி வெ. தேசிகா, லெ. அஸ்வின், செல்வி ச.நிதாலியா, த. யோகேஷ், செல்வி ரா. ஹர்ஷிதா ஆகியோர் கொண்ட குழுவினரும் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றனர்.இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சரை சந்தித்த பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் விளையாட்டினை மேம்படுத்துவதற்காக வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, போட்டிகளில் கலந்து கொள்ள நிதியுதவி, போக்குவரத்து செலவு, உதவித்தொகை, விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்குவதால் தாங்கள் 64 வது தேசிய சீனியர் தடகளப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றுள்ளதாகவும், இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளர் சொ.லதா, மூத்த துணை செயலாளர் க.புகழேந்தி, தடகள பயிற்சியாளர் ஜெ.பிரேம் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.