சென்னை விமானநிலையத்தில் திருச்சி செல்லும் விமானத்தில் இயந்திர கோளாறு: ஓடுபாதையில் அவசர நிறுத்தம்
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை திருச்சிக்கு புறப்பட்ட இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்தப்பட்டது. பின்னர் இழுவை வாகனம் மூலமாக அந்த விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் திருச்சி செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இதில் 72 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 77 பேர் இருந்தனர். இந்த விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருக்கும்போது, அந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதே நிலையில் விமானம் வானில் பறக்கத் துவங்குவது ஆபத்து என்பதை உணர்ந்து, ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டார். இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் விமானி தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அந்த விமானத்தை இழுவை வாகனம் மூலமாக ஓடுபாதையிலிருந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்த 72 பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, விமானநிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திர மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளை பழுதுபார்க்கும் பணிகளில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் தாமதமானால், ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டு உள்ள பயணிகளை மாற்று விமானம் மூலமாக திருச்சிக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் நடந்தன. இந்த விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திரக் கோளாறை, விமானம் பறப்பதற்கு முன் விமானி கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்மூலம் விபத்திலிருந்து விமானம் தப்பியதுடன், அதில் இருந்த 77 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு நிலவியது.