மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்: வைகோ அறிவிப்பு
சென்னை: மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக மதிமுக பொது செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வந்தது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறினர்.
இதன் எதிரொலியாக, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த மாதம் அறிவித்து இருந்தார். மேலும் மல்லை சத்யாவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் குற்றச்சாட்டுகளுக்கு அளித்துள்ள பதில், ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட முகாந்திரமாக இல்லை என அவரை துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக பொது செயலாளர் வைகோ, மல்லை சத்யாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சி.ஏ. சத்யா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும், தங்களை நிரந்தரமாக ஏன் நீக்க கூடாது என கடந்த மாதம் 17ம் தேதி விளக்கம் கேட்டு கழக சட்டதிட்டங்கள்படி, நான் அறிவிப்பு வழங்கியிருந்தேன். அந்த அறிவிப்பை, 19ம் தேதி பெற்றுக் கொண்டு தாங்கள் அளித்துள்ள, 24ம் தேதி 2 பதில் அறிவிப்பு, மின்னஞ்சல் மூலமாகவும், 27ம் தேதி பதிவு அஞ்சல் மூலமாகவும் கிடைக்கப் பெற்றேன்.
தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு கடந்த 6ம் தேதி ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுகளை நீங்கள் மறுக்க வில்லை. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமும் அளிக்க வில்லை. தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பு ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட முகாந்திரமாக இல்லை. தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கான பதில் முற்றிலும் ஏற்கத் தக்கது அல்ல. தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு, கழக சட்ட திட்டங்கள் விதி 35 பிரிவு 2ன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் புரிந்து, கழக சட்ட திட்டங்கள் விதி 35 பிரிவு 6ன்படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், சட்ட திட்டங்கள் விதி19, பிரிவு5, விதி 19, பிரிவு 12, விதி 35, பிரிவு 14, விதி 35, பிரிவு15 இன் படி துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
* பதவியில் இருந்து நீக்கியது மகிழ்ச்சி... வரும் 15ம் தேதி முக்கிய முடிவு; மல்லை சத்யா பேட்டி
மதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நிரந்தரமாக மல்லை சத்யா நீக்கப்பட்டார். இதையறிந்த மல்லை சத்யா, காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகளை வழங்கி மல்லை சத்யா கொண்டாடினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதிமுக எனும் மகன் திமுகவில் இருந்து எங்களுக்கு விடுதலை கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். ஏற்கனவே, தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு, தற்காலிக நடவடிக்கை என கூறியது வேடிக்கையாக உள்ளது. செப்டம்பர் 15ம்தேதி அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுப்போம். திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கும், நாங்கள் நடத்தும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.
வைகோ உள்கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டார் என்பதற்கு உதாரணம் தான் இந்த விளக்க கடிதம். எங்களை பதவிலிருந்து நீக்கியதற்கு அதிர்ச்சியாகவில்லை, மாறாக மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால்தான், இந்நிகழ்வை நாங்கள் கொண்டாடுகிறோம். என்னை விலக்குவதாக ஒரே நாளில் விளக்கம் கேட்டும், அதே நாளில் அவரது கடிதத்துக்கு விளக்கம் அளிக்குமாறும் ஒரு போலியான நாடகத்தை அரங்கேற்றம் செய்துள்ளார். தீர்ப்பை முன்கூட்டியே எழுதி வைத்துவிட்டு ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார். வைகோவின் அறிக்கைக்கு பதிலாக 14 பக்கம் அடங்கிய விளக்க கடிதம் அனுப்பி வைத்துள்ளேன். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தான் என்னை கட்சியிலிருந்து நீக்க அறிக்கை தந்ததாக கூறுகிறார்.
ஆனால், அப்படி ஒரு குழு இப்போது மதிமுகவில் இல்லை. அக்குழுவின் தலைவரான மத்திய சென்னையின் மாவட்ட செயலாளர் இளவழகன் எங்கள் அணியில் இருக்கும்போது எப்படி அறிக்கை தந்திருக்க முடியும். கட்சிக்காக கடுமையாக உழைத்த என் மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டுகளை கூறியவுடனே நாங்கள் மதிமுக கொடியையோ அல்லது கட்சி கரை வேட்டியையோ பயன்படுத்தவில்லை. வைகோ இப்போது திமுக கூட்டணிக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். பாஜவுடன் கூட்டணி வைத்திருப்பது விரைவில் தெரிந்து விடும். வரும் செப்.15ம்தேதி காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பிறந்த நாளில் எங்கள் அணியின் குறிக்கோள்களை, லட்சியங்களை அறிவிப்போம். அழுத்தமாக தடத்தை பதிவு செய்து, இயக்கப் பணிகளை செப்.15ம்தேதி முதல் முழுவீச்சோடு செயல்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.