எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 3ம் சுற்றில் இடம் கிடைத்து படிக்க விரும்பாமல் வெளியேற நினைத்தால் அபராதம்
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் இதுவரை 2 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. 2ம் சுற்றில் இடம் கிடைத்தவர்கள் தற்போது கல்லூரிகளில் சேர்க்கை பெற்று வருகின்றனர். செப்டம்பர் 30ம் தேதிக்குள் இடம் கிடைத்தவர்கள் சேர்க்கை பெற வேண்டும்.
முதல் 2 சுற்றுகளில் இடம் கிடைக்காதாவர்கள் மூன்றாம் சுற்றில் பங்கேற்கலாம். மேலும் 2ம் சுற்றில் இடம் கிடைத்து, அதை மாற்ற விரும்புபவர்களும் 3ம் சுற்றில் பங்கேற்கலாம். மூன்றாம் சுற்றில் ப்ரீ எக்ஸிட் எனப்படும் வெளியேறுதல் வாய்ப்பு இல்லை. இதில் கிடைத்து சேர்க்கை பெறாவிட்டால், அடுத்து நடக்கும் காலியிட சுற்று அல்லது 4ம் சுற்றில் பங்கேற்க அனுமதி இல்லை. அதேநேரம் 3ம் சுற்றில் இடம் கிடைத்து, சேர்க்கை பெற்றபின் கல்லூரியில் படிக்க விரும்பாமல், வெளியேற நினைத்தால் அபராதம் செலுத்த வேண்டி வரும்.
இடைநிற்றல் கட்டணம் ரூ. 10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் கல்வி கட்டணம், பாதுகாப்பு வைப்புத்தொகை திருப்பி தரப்படாது. தமிழக கவுன்சலிங்கில் இரண்டாம் சுற்று முடிவில், அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பொதுப்பிரிவு மேனேஜ்மெண்ட் இடங்கள் முழுவதுமாக நிரம்பிவிட்டன.
யாரேனும் சேர்க்கை பெறவில்லை என்றால், அந்த இடங்கள் மூன்றாம் சுற்றுக்கு வரும். அதேநேரம் சிறுபான்மையினர் ஒதுக்கீட்டு பிரிவில் மலையாளம் பிரிவில் 6 இடங்களும், என்.ஆர்.ஐ பிரிவில் 366 இடங்களும் என 372 இடங்கள் காலியாக உள்ளன. ஒருவேளை இந்த இடங்கள் மூன்றாம் சுற்றில் நிரப்பப்படவில்லை என்றால், அவை பொதுப்பிரிவு மேனேஜ்மெண்ட் இடங்களாக மாற்றப்படும்.
இந்த இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.6ம் தேதி ஆன்லைனில் தொடங்கவுள்ளது. இந்தச் சுற்று, மருத்துவப் படிப்பை எப்படியாவது உறுதி செய்ய விரும்பும் மாணவர்களுக்கு ஒரு கடைசி மற்றும் முக்கியமான வாய்ப்பு ஆகும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.