எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு டிஎம்இ எச்சரிக்கை
சென்னை: கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கலந்தாய்வு மூலம் அரசு இடங்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வரும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மாணவர்களை மிரட்டி அடாவடியாக கூடுதல் தொகையை வசூலிக்க நினைத்தால் அந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். 2025-26 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கவுன்சிலிங்கில் எந்தவொரு சுற்றுக்கும் விண்ணப்பதாரரை அனுமதிக்க மறுத்து, கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத் தவிர அதிக கட்டணத்தைக் கோரினால், அரசாங்கத்தால் அந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.