சென்னையில் கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் மேயர் பிரியா
சென்னை: சென்னை மேயர் ஆர்.பிரியா , டிட்வா புயல் மழையின் காரணமாக ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ள பழமையான கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை மாநகராட்சி, ஓட்டேரி, ஸ்ட்ராஹன்ஸ் சாலை சந்திப்பில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வந்த பிரியாணி மற்றும் சிற்றுண்டி உணவகக் கடைகளின் மேற்கூரை டிட்வா புயல் மழையின் காரணமாக 02.12.2025 அன்று இரவு 9.15 மணியளவில் இடிந்து விழுந்ததில் அபிஸ் (வயது-38), சரிபா பானு (வயது-39), அயூப்கான் (வயது-40) ஆகிய மூன்று நபர்களுக்கு காயம் ஏற்பட்டு, இதில் இரண்டு நபர்கள் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒரு நபர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேயர் ஆர்.பிரியா, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கவிதா, மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர், நிலை மருத்துவ அலுவலர் டாக்டர் வாணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.