மேயர், கணவரை சுட்டுக்கொன்ற 5 பேருக்கு தூக்கு
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாநகராட்சி மேயராக இருந்த கட்டாரி அனுராதா, இவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோர் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அலுவலகத்தில் இருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் கணவன், மனைவியை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தனர்.
சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அனுராதாவின் தம்பி சிண்டு என்கிற சந்திரசேகர், அவரது கூட்டாளிகள் சேர்ந்து, சொத்து தகராறில் கொலை செய்தது தெரியவந்தது. சிண்டு உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சித்தூர் நீதிமன்றம் சிண்டு என்கிற சந்திரசேகர், வெங்கடாசலபதி என்கிற முன்பாகல் வெங்கடேஷ், ஜெய்பிரகாஷ் ரெட்டி, மஞ்சுநாத், வெங்கடேஷ் என்கிற கங்கணப்பள்ளி வெங்கடேஷ் ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. மற்ற 18 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.