மயிலாடுதுறை புதிய பேருந்து நிறுத்த வணிக வளாகத்திற்கான டெண்டரை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
சென்னை : மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளை எதிர்த்த வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கிராமத்தை சேர்ந்த வீரய்யன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட மணக்குடி பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான சரியான சாலை வசதிகள் இல்லை.பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலம் மணக்குடி கிராம பஞ்சாயத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மயிலாடுதுறை நகராட்சிக்கு வகைமாற்றம் ெசய்யவில்லை. அத்தியாவசிய மின் உள்கட்டமைப்பு, குடிநீர் சேவை, கழிவுநீர் வடிகால் இணைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.
கட்டுமான பணிகளால் ஏற்கனவே இருந்த இயற்கை நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளது.மணக்குடி பேருந்து நிலையத்தில் கடைகள், உணவகம், பொருள் பாதுகாப்பு அறைகள், கட்டண கழிப்பறைகள், ஏடிஎம் மையங்கள் அமைக்க விடப்பட்டுள்ள டெண்டர் நிபந்தனையில், 7 நாட்களுக்குள் ஒரே தவணையில் 12 மாத வாடகைக்கான வைப்புத்தொகையை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது சாதாரண வர்த்தகர்கள் மற்றும் சிறு விற்பனையாளர்கள் டெண்டரில் பங்கேற்பதை தடுப்பதாக உள்ளது.எனவே, பேருந்து நிலைய பணிகள் முழுமையடையாமல் கடைகள், பொருட்கள் பாதுகாப்பு அறைகள், கழிப்பறைகள் மற்றும் ஏடிஎம்கள் அமைப்பதற்கான நகராட்சி டெண்டரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.வத்ஸவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இந்த வழக்கு விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் வீரய்யனின் மனுவை ரூ.50 அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.