மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி கடை முழுக்கு தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்
மயிலாடுதுறை: ஐப்பசி கடைமுழுக்கையொட்டி மயிலாடுதுறை துலாகட்டத்தில் துலாஸ்நானம் தீர்த்தவாரி இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். ஐப்பசி மாதத்தில் ஏழு புண்ணிய தீர்த்தங்களில் ஒன்றான காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு சமமென்று புராணங்களில் கூறப்படுகிறது. குடகிலிருந்து புறப்பட்டு பூம்புகாரில் கடலோடு கலக்கும் வரை இப்புண்ணிய நதிக்கரையில் 3 இடங்கள் மிக விஷேசமான தீர்த்த கட்டங்கள் ஆகும். இதில் முதலாவது திருப்பராய்த்துறை, 2வது கும்பகோணம், 3வது மயிலாடுதுறை. ஐப்பசி முதல் நாளன்று திருப்பராய்த்துறையிலும், கடைசி நாளில் மயிலாடுதுறை துலாகட்டத்திலும் நீராடி அத்தலங்களில் உள்ள சிவமூர்த்திகளை வழிபடுவோருக்கு துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம்.
அக்டோபர் 18ம் தேதி துலா மாத பிறப்பையொட்டி திருப்பராய்த்துறை துலாகட்டத்தில் புனித நீராடல் நடந்தது. அதனை தொடர்ந்து ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் புனித நீராடினால் இந்த பலன் கிடைக்கும் என்பதால் திருப்பராய்த்துறை, திருச்சி ரங்கம் அம்மா மண்டபம் உள்பட காவிரி கரைகளில் பொதுமக்கள் அதிகாலை நீராடி வருகின்றனர். இந்நிலையில் ஜப்பசி கடைசி நாளில் மயிலாடுதுறை துலாகட்டத்திலும் நீராடி அத்தலங்களில் உள்ள சிவமூர்த்திகளை வழிபடுவோருக்கு துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம்.
மயிலாடுதுறையில் மாயூரநாதசுவாமி கோயில் உள்ளது. அங்கே சிவலிங்கத்தில் இறைவன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். அன்னையானவள் மயில் உருகொண்டு சிவலிங்கத்தைப் பூஜித்த பெருஞ்சிறப்பு உடையது. பெரியகோயிலின் வடபுறத்தில் உள்ள துலாக்கட்டக் காவிரியில் கங்கை உட்பட அனைத்து புண்ணிய நதிகளும் இங்குவந்து பாவங்களை போக்கிக்கொண்டதால் இங்கே புனித நீராடுவது இந்தியாவில் உள்ள ஏழு புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைப்பதாக ஐதீகம். அதன்படி ஐப்பசி கடை முழுக்கையொட்டி இன்று காலை 5 மணி முதலே பக்தர்கள் காவிரி துலாக்கட்டத்தில் குவிந்து புனித நீராடினர்.
மயிலாடுதுறை சிவாலயங்களில் ஐப்பசி மாதம் கடைசி பத்து நாட்கள் விழா நடைபெறும். கடந்த 3ம் தேதி அமாவாசை தீர்த்தவாரி விழா நடந்தது. தொடர்ந்து கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கிய உற்சவம் திருக்கல்யாணம், தேர், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நிறைவுற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி இன்று மதியம் நடந்தது.
அப்போது திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர், அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாரப்பர், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தெப்பக்குளம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், படித்துறை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆகிய கோயில்களிலிருந்து சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு துலாக்கட்ட காவிரி தென் கரையிலும், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆகிய கோயில்களிலிருந்து சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு காவிரி வடக்கு கரையிலும் எழுந்தருளினர். ெதாடர்ந்து அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. கார்த்திகை 1ம் தேதியான நாளை முடவன் முழுக்கு விழா நடைபெறுகிறது.