MAXICAB வேன்களை மினி பேருந்துகளாக மாற்ற தமிழக அரசு முடிவு
சென்னை: MAXICAB வேன்களை மினி பேருந்துகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 25 கி.மீ வழித்தடத்தில் MAXICAB வேன்களை பயன்படுத்த திட்டம். மலை, கிராம பகுதிகளில் வேன்கள் மினி பேருந்துகளாக மாற்றப்படும். கிராமங்களில் பொதுப்போக்குவரத்தை எளிமைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக 2,000 வேன்களை மினி பேருந்துகளாக இயக்க திட்டமிட்டுள்ளது. வேன்களை மினி பஸ்களாக இயக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அனுமதி பெறலாம்.
தமிழக அரசு மினி பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் புதிய திட்டத்தை களமிறக்கவுள்ளது. இதன்மூலம் சிறிய வேன்களும் பொதுப் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மக்கள்தொகை, வாகன நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளன. இதையொட்டி சிறிய பகுதிகளுக்கும் செல்லும் வகையில் மினி பேருந்துகள் திட்டத்தை புதுப்பித்து கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும் இதுவரை 1,000 ஆபரேட்டர்கள் மட்டுமே பதிவு செய்திருக்கின்றனர்.
ஆனால் தமிழக அரசின் திட்டத்தின் படி 25,000 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கும் வகையில் குறைந்தது 5,000 மினி பேருந்துகள் தேவைப்படுகின்றன. இந்த சூழலில் மினி பேருந்து சேவைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பலரும் தங்கள் பகுதிக்கு மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிகை விடுத்து வருகின்றன. கடைசி மைல் தொலைவு வரை மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு, இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
அதன்படி, மினி பேருந்துகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனியார் வேன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதி அளிக்கக் கூடாது. இருக்கைக்கு ஏற்ப மட்டுமே பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகை வேன்களில் உயரம் குறைவாக இருக்கும் என்பதால் நின்று கொண்டு பயணிக்க செல்வதற்கு அனுமதி இல்லை.
வேன்களை மினி பேருந்துகளை மாற்றி பயன்படுத்தும் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்யுங்கள். இதுபற்றி விரிவான அறிக்கையை அடுத்த ஒரு மாதத்தில் சமர்பிக்க வேண்டும். எந்தெந்த பகுதிகளில் மினி பேருந்து வசதிகள் தேவைப்படுகின்றன என்பது பற்றி விவரங்கள் சேகரித்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேன்களை மினி பஸ்களாக மாற்றும் திட்டத்தின் மூலம் பள்ளி வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவை பொதுப் போக்குவரத்து வசதிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகப்படியானோரை ஏற்றி செல்லக் கூடாது. தொங்கி கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தலைமை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளது.