மாட்லாம்பட்டி அருகே மூடிக்கிடக்கும் மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கு
தர்மபுரி : கன்னிப்பட்டியில் மூடிக்கிடக்கும் மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், அனைத்து ஊராட்சிகளிலும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து, மண்புழு உரம் தயாரிக்கும் முறை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், மாட்லாம்பட்டி அருகே உள்ள கன்னிப்பட்டி பகுதியில், மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கு, தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
இக்கிடங்கில் ஊராட்சி சார்பில், வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் பணி நடந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி ஊராட்சி, பாப்பாரப்பட்டி உள்பட பல ஊராட்சி நிர்வாகங்களில் மண்புழு உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை விற்பனை செய்து வருகிறது.
அதே போல், ஊராட்சி நிர்வாகம், குப்பபைகளில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்படுவதோடு விவசாயிகளுக்கு தேவையான உரம் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கன்னிப்பட்டி பகுதியில், சில ஆண்டுகளாக மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கு பயன்பாடின்றி மூடிக்கிடக்கிறது. இதனால் உரம் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மூடிக்கிடக்கும் மண்புழு உரம் தயாரிப்பு கிடங்கை, மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்,’ என்றனர்.