ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை : 2வது திருமணம் செய்ததை ஒப்புக் கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ்!
சென்னை : ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி ஸ்ருதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. இந்த சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார்.இதே விவகாரத்தை ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்திலும் புகாராக அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் இரண்டு முறை விசாரணையும் நடந்தது. விசாரணையின்போது மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் நேரில் ஆஜரானார். ஜாய் கிரிசில்டாவின் புகாரை மாநில மகளிர் ஆணையம் விசாரித்த நிலையில், அவருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, ஜாய் கிரிசில்டாவை தான் திருமணம் செய்ததாகவும், அவரது குழந்தையின் தந்தை என்றும் மகளிர் ஆணையத்தின் விசாரணை முன்பாக மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது.