முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு 93.18% தேர்வர்கள் வருகை: 16,118 பேர் ஆப்சன்ட்
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதியுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் வெளியிட்டது.
இந்த தேர்வு மூலம் மொத்தம் 1996 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்து, அக்டோபர் 12ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1996 காலிப்பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 410 பேர் பெண்கள், 63 ஆயிரத்து 113 பேர் ஆண்கள் மற்றும் 7 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். குறிப்பாக 3 ஆயிரத்து 734 மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, நேற்று மாநிலம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 20 ஆயிரத்து 412 பேர் வருகை புரிந்து தேர்வு எழுதியுள்ளனர். 16 ஆயிரத்து 118 தேர்வர்கள் வருகை புரியவில்லை எனவும் ஒட்டுமொத்தமாக மாநில அளவில் 93.18 சதவீதம் தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.