ஓடும் சொகுசு பஸ்சில் பயங்கர தீ: 29 பேர் உயிர் தப்பினர்
திருமலை: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சித்யாலா பகுதியில் உள்ள விஜயவாடா-ஐதராபாத் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தனியார் சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் டிரைவர் உள்பட 29 பயணிகள் பயணம் செய்தனர். வேலிமினேடு என்ற இடத்தில் சென்றபோது சொகுசு பஸ்சில் திடீரென புகை வந்துள்ளது. இதை கவனித்த டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். மேலும் பயணிகள் அனைவரும் கீழே இறங்குமாறு கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு அவசர அவசரமாக வெளியே வந்து உயிர் தப்பினர். கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பஸ் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கர்னூலில் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 19 பேர் உயிருடன் கருகி இறந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது மீண்டும் பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.