மருதுபாண்டியர் சகோதரர்களின் நினைவு நாள்; அவர்களது வீரமும் தியாகமும் என்றும் தமிழ் நாட்டு மண்ணில் நிலைத்திருக்கும்: செல்வப்பெருந்தகை
சென்னை: மருதுபாண்டியர் சகோதரர்களின் நினைவு நாளான இன்று அவர்களது வீரமும் தியாகமும் என்றும் தமிழ் நாட்டு மண்ணில் நிலைத்திருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை புகழஞ்சலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய விடுதலைக்காக உயிர் நீத்த மாமன்னர்கள் மருதுபாண்டியர் சகோதரர்கள் பெரிய மருதுபாண்டியர் மற்றும் சின்ன மருதுபாண்டியர் ஆகியோர்களின் தியாகத்தினை நினைவு கூரும் நாளாக அக்டோபர் 24 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் மண்ணில் பிறந்த இம்மாமன்னர்கள், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வீரமரணம் எய்தியவர்கள். தமது சொந்த சுதந்திர இராச்சியத்தை காப்பாற்றவும், இந்தியா முழுவதும் சுதந்திரத்தின் தீபம் ஏற்றவும் அவர்கள் போராடினர். அந்நிய ஆட்சியின் கொடுமைகளுக்கு தலைவணங்காது, தமது உயிரையே ஈந்தனர். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம், அவர்களின் தியாகத்தின் விளைவாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மருதுபாண்டியர்கள் நமக்கு சுதந்திரத்தின் அருமையையும், தன்னம்பிக்கையின் வலிமையையும் கற்றுத் தந்தவர்கள்.
இந்த நினைவு நாளில், அவர்களின் தியாகத்தையும் தேசப்பற்று உணர்வையும் நெஞ்சில் நிறுத்தி, அனைத்து இளைஞர்களும் நாட்டுப்பற்று, ஒற்றுமை, நீதி ஆகிய பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இந்நாளின் உண்மையான பொருள். மருதுபாண்டியர் சகோதரர்களின் வீரமும் தியாகமும் என்றும் தமிழ் நாட்டு மண்ணில் நிலைத்திருக்கும்! வீரமருதுபாண்டியர் இருவருக்கும் நம் இதயபூர்வமான வணக்கங்கள்! இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.