2 திருமணம் முடிந்தும் ஆசை தீரல... 3வதாக கள்ளக்காதலனுடன் ஓட்டம் மகளை அடித்து கொன்ற தந்தை
போடி: இரண்டு திருமணத்துக்கு பின்பும் மேலும் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்ட மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், போடி, பங்காருசாமி கண்மாய் கரையில், ஒரு இளம்பெண் இறந்து கிடப்பதாக போடி நகர் விஏஓ விஜயலட்சுமிக்கு 2 நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர், போடி தாலுகா போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டனர்.
விசாரணையில், இறந்த பெண் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்த தங்கையா மகள் பிரவீணா (29) என தெரிந்தது. இதையடுத்து தங்கையாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், தங்கையா மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை நேற்று முன்தினம் கைது செய்து, போடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:பிரவீணாவுக்கும், உள்ளூரை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஒரு குழந்தை உள்ள நிலையில், பிரவீணா கணவரை பிரிந்து, போடி அருகே முந்தல் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாசுக்காளையை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது மேலும் ஒருவருடன் பிரவீணாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. 2வது கணவரை விட்டு விட்டு, அவருடன் செல்ல தயாராக இருந்தது தங்கையாவுக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக மாசுக்காளைக்கும், பிரவீணாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பிரவீணாவின் நடத்தையால் தங்கையா மகனின் திருமணம் தடைபட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த தங்கையா, கடந்த 23ம் தேதி காலை போடி முந்தல் காலனிக்கு சென்று அங்கிருந்த பிரவீணாவை டூவீலரில் ஏற்றிக்கொண்டு போடி பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளார். அப்போது, உணவில் விஷ மாத்திரை கலத்து பிரவீணாவுக்கு கொடுத்து சாப்பிட வைத்துள்ளார். ஆனால், அது பலனளிக்கவில்லை. பின்னர், மகளை பங்காருசாமி கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்தும், அடித்தும் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.