உடல்ரீதியாக ஒன்றாக வாழ்ந்துவிட்டு திருமணம் செய்ய நடிகர் மறுக்கிறார்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருநங்கை பரபரப்பு புகார்
சென்னை: கடந்த 5 ஆண்டுகள் என்னுடன் உடல் ரீதியாக ஒன்றாக வாழ்ந்துவிட்டு ஏமாற்றியதாக சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது சக நடிகையான திருநங்கை வைஷூலிசா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த வைஷூலிசா என்பவர் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 15 ஆண்டுகளாக சின்னத்திரை நடிகையாக உள்ளேன். எனக்கும் சக நடிகரான நாஞ்சில் விஜயன் என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளாக பழக்கம். இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அவர் நினைக்கும் போதெல்லாம் ஒன்றாக மனைவி போல் இருந்தேன்.
என்னை அவர், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. இருந்தாலும் அவர் என்னுடன் வாழ்ந்து வந்தார். அவர் கேட்கும் போது எல்லாம் பணம் கொடுத்தேன். அதன்படி தற்போது கூட நான் ரூ.3 லட்சம் பணம் கொடுத்துள்ளேன். திடீரென என்னிடம் பேசு மறுத்து, என்னை ஏமாற்றும் நோக்கத்துடன் திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறார். அவரை நான் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மிகவும் மனதளவிலும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே என்னை ஏமாற்றிய நாஞ்சில் விஜயன் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் புகார் அளித்துள்ளார்.