மெரினாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தொடர்ந்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: சென்னையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளின்போது 5 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இது மிகவும் துயரமான சம்பவம். காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஒரு பொது நிகழ்ச்சியில் துயரங்கள் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்திய விமானப்படை கடந்த காலங்களில் மாலை நேரங்களில் இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை நடத்தியது. சென்னையில் மட்டும் நண்பகலில் உச்சி வெயிலில் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது. இந்த மரணங்களை அரசியலாக்க விரும்பவில்லை. நீர்சத்து குறைபாடு காரணமாக 5 பேர் இறந்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். குழந்தைகளின் படிப்பு செலவை காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.