மெரீனா நீலக்கொடி கடற்கரையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்: பொதுமக்கள் கண்டுகளிப்பு
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில், மெரீனா நீச்சல் குளம் அமைந்துள்ள பகுதியில் உலகத்தரம் வாய்ந்த நீலக்கொடி சான்றுக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த நீலக்கொடி கடற்கரைப் பகுதிக்கு, மக்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில், மெரீனா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.
இந்த கலை நிகழ்ச்சியில், கலை வளர்மணி பன்னீர் ராஜன் குழுவினரின் நையாண்டி மேளம், கரகம், காளை, மயில் ஆட்டங்களும், தீபன் குழுவினரின் பறையாட்டம் கலை நிகழ்ச்சியும், தருமபுரி சிவக்குமார் குழுவினரின் பம்பை, சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சியும், கலப்பை குழுவினரின் களியாட்டம் மற்றும் சாட்டைக்குச்சியாட்டம் கலை நிகழ்ச்சியும், எல்லையில்லா கலைக்குழு நியூட்டன் துடும்பாட்டம் கலை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.