மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை சொற்பொழிவு நடத்த விண்ணப்பிக்கலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலை: மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை சொற்பொழிவு நடத்த தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் தேவஸ்தானத்தின் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருப்பாவை சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு வரும் டிசம்பர் 16ம்தேதி முதல் 2026 ஜனவரி 14ம்தேதி வரை புனிதமான மார்கழி மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருப்பாவை சொற்பொழிவுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக வைணவ கோட்பாட்டை நன்கு அறிந்த தகுதி வாய்ந்த அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மற்றும் ஏற்பு கடிதங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியானவர்கள் வரும் செப்டம்பர் 1ம்தேதி (நாளை) முதல் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘சிறப்பு அதிகாரி, ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டம், ஸ்வேதா பவன், திதி தேவஸ்தானம் திருப்பதி’ என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் மற்றும் ஏற்பு கடிதங்களை அனுப்ப வேண்டும். ஏற்பு கடிதங்களை வழங்கும் அறிஞர்களின் பட்டியலை, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பங்களுடன் www.tirumala.org என்ற இணையதளத்தில் பெறலாம். மற்ற விவரங்களுக்கு, ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* ரூ.3.92 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 77,295 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 26,779 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் உள்ள உண்டியல்களில் ரூ.3.92 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 12 அறைகளில் பக்தர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் சுமார் 8 முதல் 10 மணி நேரத்தில் தரிசனம் செய்வார்கள். நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் சுமார் 4 மணி நேரத்திலும் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.
* திருமலை கோயில் பகுதியில் 4 மணி நேரம் பலத்த மழை
ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் திருப்பதி மற்றும் திருமலையில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் திருமலையில் நேற்று இரவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள கூடாரம், கட்டிடங்கள், விடுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இலவச தரிசன வரிசையில் நின்ற பக்தர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். அதேபோல் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி தங்கும் அறைகளுக்கு சென்றனர். சிலர் குடைகளை பிடித்தபடி சென்றனர். சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் திருமலை முழுவதும் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த கனமழையால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.