மார்கழி பிறக்க உள்ளதால் கலர் கோலப்பொடி தயாரிப்பு ஜரூர்
சாத்தூர் : சாத்தூரில் வண்ண கோலப்பொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மார்கழி மாதம் இன்னும் சில தினங்களில் பிறக்க உள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் வண்ண வண்ண கலரில் கோலம் போடுவதற்காக அதிகளவு கோலப்பொடிகளை வாங்கி செல்கின்றனர். இதையடுத்து சாத்தூரில் கலர் கோலப்பொடி தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது. இரவு, பகலாக கோலப்பொடி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து பெருமாள் கோயில் தெருவில் கலர் பொடி தயாரிக்கும் பெண்கள் கூறுகையில், சுமார் 30 ஆண்டுக்கும் மேலாக கலர் கோலப்பொடி தயாரித்து வருகிறோம். ரூ.5 பாக்கெட்டில் இருந்து ரூ.50 பாக்கெட் வரை தயாரித்து வருகிறோம்.
தற்போது வெள்ளை, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, ரோஸ், ஊதா, கருப்பு, நீலம், வயலட் சிவப்பு உள்பட அனைத்து கலர்களிலும் தயாரித்து வருகிறோம். பொங்கல் நெருங்குவதை முன்னிட்டு ஏராளமானோர் கோலப்பொடி வாங்கிச் செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.