நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
சென்னை: நாட்டின் மொத்த உற்பத்தித்துறை வேலைவாய்ப்பில் 15% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு வெளியிட்ட, 2023-24ம் ஆண்டிற்கான வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு (ASI) முடிவுகளின் படி, இப்பட்டியலில் குஜராத் (13%), மகாராஷ்டிரா (13%), உத்தரப் பிரதேசம் (8%), கர்நாடகா (6%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இது குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில்,
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் 2023-24 ஆண்டிற்கான வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு முடிவுகளின் படி, நாட்டின் மொத்த உற்பத்தித்துறை வேலைவாய்ப்பில் 15% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கும் செய்தி, மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. மக்கள் நலனையும் தெளிவுமிக்க பொருளாதாரக் கொள்கைகளையும் முன்னிறுத்தி, தமிழ்நாட்டை வழிநடத்திச் செல்லும் முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசாட்சிக்கு மற்றுமொரு சிறப்பாக அமைந்திருக்கிறது, ஆய்வு முடிவுகள். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முதன்மை லட்சியமாகக் கொண்டு பயணிக்கும் நம் தமிழ்நாடு, வெகு விரைவில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்! இவ்வாறு தெரிவித்தார்.