மன்னார்க்காடு அருகே பாக்கு தோட்டத்தில் காட்டு யானை மர்மச்சாவு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை
பாலக்காடு: மன்னார்க்காடு அருகே பாக்கு தோட்டத்தில் காட்டு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு தாலுகா வனத்துறை மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட திருவிழாம்குன்று பாரஸ்ட் நிலையம் கச்சேரிப்பரம்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் பாக்குத் தோட்டத்தில் காட்டுயானை நேற்று உயிரிழந்து கிடந்தது.
இது குறித்து தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மன்னார்க்காடு ரேஞ்சு அதிகாரி இம்ரோஸ் ஏலியாஸ் நவாஸ் தலைமையில் வனத்துறை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். ஆய்வில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை எனவும், உடலில் எவ்வித காயங்களும் இல்லை எனவும், உடற்கூறு பரிசோதனைக்கு பிறகே யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.