மன்னார்குடியில் இலவச சிலம்பப் பயிற்சி அளிக்கும் இளைஞர்: மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பாட்டத்தை இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார் சிவா என்ற இளைஞர். சிலம்பாட்டம் என்பது தமிழர்களின் தற்காப்புக் கலை மற்றும் வீரர் விளையாட்டாகும். நீண்ட தடியை கொண்டு எதிராளியை முன்னேறவிடாமல் தாக்கி வெற்றிகாண்பது இந்த விளையாட்டு மகுத்துவம் . தமிழகத்தில் எத்தனையோ விளையாட்டுக்கள் இருந்தாலும் சிலம்பாட்டத்திற்கு என்று தனி மதிப்பும் பெருமையும் உண்டு. மன்னார்குடியில் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வரும் சிவா அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு தங்கள் ஊர் மக்களுக்கு சிலம்பக்கலையை இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.
சிலம்பக்கலையை பாதுகாக்கும் நோக்கில் இதனை செய்து வரும் சிவா ஊதியம் கொடுத்து ஒரு பயிற்சியாளரையும் நியமித்துள்ளார். 200க்கும் மேற்பட்டோர் ஆர்வத்தோடு சிலம்பாட்டத்தை பயின்று வருவதாகவும், பலர் மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து வருவதாகவும் சிவா பெருமிதத்தோடு தெரிவிக்கிறார். பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவித்து வரும் தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களுக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பத்தையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.