மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு 10 விருதுகள் கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர் மம்மூட்டி: நடிகை ஷம்லா ஹம்சா
திருவனந்தபுரம்: கேரள அரசின் கடந்த ஆண்டுக்கான சிறந்த மலையாள திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக மம்மூட்டியும், நடிகையாக ஷம்லா ஹம்சாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரள அரசின் 55வது சிறந்த மலையாள திரைப்பட கலைஞர்களுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியான் திருச்சூரில் விருதுகளை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு: சிறந்த நடிகர் மம்மூட்டி (படம்-பிரம்மயுகம்), நடிகை ஷம்லா ஹம்சா (படம்-பெமினிச்சி பாத்திமா), சிறந்த படம் மஞ்சும்மல் பாய்ஸ், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை -சிதம்பரம் (படம்-மஞ்சும்மல் பாய்ஸ்).
சிறந்த இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் (படம்-மஞ்சும்மல் பாய்ஸ்), சிறந்த பாடகர் ஹரிசங்கர் (படம்-ஏஆர்எம்), பாடகி செபா டோமி (படம்- அம் ஆ), பாடலாசிரியர் வேடன் (படம்-குதந்திரம்)ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித் (படம்-மஞ்சும்மல் பாய்ஸ்). ஜனரஞ்சக சினிமா-பிரேமலு, சிறந்த புதுமுக இயக்குனர் பாசில் முகம்மது (படம்-பெமினிச்சி பாத்திமா). சிறப்பு ஜூரி விருதுக்கு நடிகர்கள் டொவினோ தாமஸ் மற்றும் ஆசிப் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரூ.250 கோடிக்கு மேல் வசூலை குவித்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு மொத்தம் 10 விருதுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மம்மூட்டிக்கு இது 7வது சிறந்த நடிகருக்கான விருதாகும்.