மணிப்பூரில் ஓயாத வன்முறை; கிராமத் தலைவர் அடித்துக் கொலை: தீவிரவாத அமைப்பு வெறிச்செயல்
இம்பால்: மணிப்பூரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், கிராமத் தலைவர் ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இன குழுக்களின் வன்முறையின் ஒரு பகுதியாக, சுராசந்த்பூர் மாவட்டத்தில் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில், ‘ஐக்கிய குக்கி தேசிய ராணுவம்’ என்ற அமைப்பு, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
மணிப்பூர் அரசு கடந்த 2023ம் ஆண்டிலேயே இந்த அமைப்புடனான ஒப்பந்தத்தை முறைப்படி ரத்து செய்தது. இந்த அமைப்பு, கடந்த ஜூலை மாதம் குக்கி தேசிய ராணுவத்தின் துணைத் தளபதி உட்பட நால்வரைக் கொன்ற கொடூரமான பதுங்குத் தாக்குதல் உள்ளிட்ட பல வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடையது. இந்த நிலையில், சுராசந்த்பூர் மாவட்டத்தின் ஹெங்லெப் பகுதிக்கு உட்பட்ட டி கோனோம்ஃபை கிராமத்தின் தலைவரான மங்தாங் ஹாவோகிப் (50) என்பவர் மீது, நேற்று முன்தினம் மாலை மர்ம கும்பல் ஒன்று கொடூரமான தாக்குதல் நடத்தியது.
ஐக்கிய குக்கி தேசிய ராணுவத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், குச்சிகள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளன. படுகாயமடைந்த அவரை உள்ளூர் கிராம மக்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஹெங்லெப் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.