மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 போராளிகள் உயிரிழப்பு!
மணிப்பூர்: மணிப்பூரில் குக்கி தேசிய ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்த போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் மோதல் ஏற்பட்டது. சூர்சந்த்பூர் மாவட்டம் கான்ஃபி என்ற கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 போராளிகள் உயிரிழந்தனர்.
சூர்சந்த்பூர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் மேற்கில் அமைந்துள்ள கான்ஃபி கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில தடை செய்யப்பட்ட குக்கி தேசிய ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்த போராளிகள் பாதுகாப்புப் படையினரைத் தாக்கினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
அப்போது குக்கி தேசிய ராணுவ போராளிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் யுனைடெட் குகி நேஷனல் ஆர்மி (UKNA) என்ற ஆயுதக் குழுவின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. துப்பாக்கிச் சண்டைக்கு இடையே பல தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல குக்கி மற்றும் ஜோமி தீவிரவாத குழுக்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுடன் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. ஆனால் இந்த பட்டியலில் UKNA பெயர் சேர்க்கப்படவில்லை.
துப்பாக்கிசூடு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற தீவிரவாதிகளைத் தேடும் பணி அந்தப் பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோதல் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகளை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.