இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செப். 12ல் பிரதமர் மோடி பயணம்?: ஒன்றிய அரசு வட்டாரங்கள் தகவல்
புதுடெல்லி: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்குப் பிரதமர் மோடி முதன்முறையாக வரும் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார். மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி-சோ சமூகத்தினரிடையே மூண்ட இனக்கலவரம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறையில் 221க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 50,000 மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.
வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால், அங்கு கடந்த 2025 பிப்ரவரி மாதம் 13ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 5ம் தேதி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும், கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பிரதமரின் இந்த நீண்டகால மவுனம் குறித்து எதிர்க்கட்சிகளும், உள்ளூர் மக்களும் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி வரும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் (செப்டம்பர் 12 - 14) மணிப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தின்போது, தலைநகர் இம்பால் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவிருக்கிறார்.
மேலும், மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை அறிவித்து, பல புதிய முயற்சிகளையும் தொடங்கி வைக்க உள்ளார். அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களிலும் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.