வேதாரண்யத்தில் மாங்காய் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை, தேத்தாகுடி, கத்தரிப்புலம் புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தலைஞாயிறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3,500 ஏக்கரில் செந்தூரா, பங்கனபள்ளி, ருமெனியா, ஒட்டு, நீலம் என 10க்கும் மேற்பட்ட வகை மாமரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் அறுவடை செய்யப்படும் சுமார் 5,000 டன் மாம்பழங்கள் கேரளா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தாண்டு சீசன் காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சரியான விலை கிடைக்கவில்லை.
தற்போது மழை காலத்தில் காய்க்கும் கார் காய் என அழைக்கப்படும் விளைச்சல் நன்றாக உள்ளது. மரங்களில் ருமேனியா, ஒட்டு நீலம் அதிகளவில் காய்த்து உள்ளது. ருமேனியா கிலோ ரூ.55க்கும், ஒட்டு நீலம் ரூ.15 முதல் ரூ.35 வரையும் விலை போகிறது. கேரளாவுக்கு ருமேனியா அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இருப்பினும் மரங்களில் இலை மற்றும் மாங்காய்களில் கருப்பு பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. வேதாரண்யம் தோட்டகலைத்துறை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மா மரங்களை பார்வையிட்டனர். பின்னர் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.