வீட்டிற்குள் புகுந்து துணை நடிகை, தாயாரை செருப்பால் அடித்தவர் கைது: பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை
சென்னை: வீட்டிற்குள் புகுந்து துணை நடிகை மற்றும் அவரது தாயாரை செருப்பால் அடித்தவரை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் பாக்கியலஷ்மி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி (25). இவர் கோப்ரா, டிமான்டி காலனி உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவரது தாயார் ஜா (50). இந்நிலையில், இவரது வீட்டிற்கு மதுரவாயல் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ஜேம்ஸ் (42) என்பவர் நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் வீட்டிலிருந்த ஜாவிடம் முன்விரோதம் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை செருப்பால் அடித்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மதுரவாயல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜேம்சை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜேம்ஸ் மளிகை கடை நடத்தி வந்ததாகவும் அப்போது கொடுக்கல் வாங்கல் தகராறில் துணை நடிகையின் தாயார் ஜேம்சை அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 5 வருடம் கழித்து அதனை பழிவாங்கும் விதமாக வீட்டிற்கு சென்று ஜேம்ஸ் திரும்பவும் செருப்பால் அடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, துணை நடிகையின் தாயாரை செருப்பால் அடித்த புகாரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஜேம்சை கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.