மணலி கடப்பாக்கம் ஏரிக்கரையில் கழிவுகள் எரிப்பதால் பாதிப்பு
திருவொற்றியூர்: சென்னை மணலி மண்டலத்துக்கு உட்பட்ட 16வது வார்டு கடப்பாக்கம் ஏரி 56 கோடி ரூபாய் செலவில், தூர்வாரும் பணி சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. ஏரிக்கரையோரத்தில் உள்ள காலி நிலத்தில் தனியார் சிலர் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். அந்த கழிவுகளில் கிடக்கும் இரும்பு, செம்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்துவிட்டு குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டம் சுற்றுவட்டாரத்தில் வசித்துவரும் மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ‘’ஏரியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; தனியார் சிலர் லாரியில் குப்பையை கொண்டுவந்து ஏரிக்கரையில் கொட்டி எரித்து விடுகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் சடையன்குப்பம் பகுதியில் காலி நிலத்தில் குப்பையை கொட்டி தீ வைத்த தனியாருக்கு மணலி மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமையில், அதிகாரிகள் 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். கொசப்பூரில் உள்ள தொழில் துறைக்கு சொந்தமான இடத்திலும் மணலி புதுநகர் இடைஞ்சாவடியிலும் குப்பைகளை கொட்டியதையும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தடுத்தனர். கடப்பாக்கம் ஏரிக்கரையில் ரசாயன கழிவுகளை கொட்டி எரிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.