பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை
*கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
தர்மபுரி : பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாலக்கோட்டில் ஒரு தனியார் நிதி நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த நிறுவனம் பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான பரிசு திட்டங்களை அறிவித்து, 800க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.30 கோடி வரை வசூல் செய்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பணம் கட்டி டெபாசிட் தொகை முதிர்ச்சி அடைந்தவர்களுக்கும், ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கும் பணத்தை தராமல் அலைகழித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்னர் நிதி நிறுவன உரிமையாளர், நிதி நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவானார்.
இதனால், பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்டவர்கள் தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை பெற்று தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.