மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு நடத்த தடைகோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: தனி அறைக்குள் நடந்த விசாரணைக்கு பிறகு உரிமையியல் நீதிமன்றத்தை அணுக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு
சென்னை: மாமல்லபுரத்தில் அன்புமணி, பாமக பொதுக்குழு நடத்த தடை கோரிய மனுவை, தனி அறைக்குள் நடத்திய விசாரணைக்குப் பிறகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பாமகவில் தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இருவர் தரப்பிலும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாசால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2022 மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கட்சி மற்றும் அனைவரின் நலனுக்காக ராமதாஸ், அன்புமணி இருவரிடமும் தனித்தனியாக விசாரிக்கப்போகிறேன்.
இருவரையும் எனது அறைக்கு மாலை 5.30 மணிக்கு வருமாறு தெரிவியுங்கள். இரு தரப்பு வழக்கறிஞர்கள், கட்சிக்காரர்கள் என ஒருவருக்கும் அனுமதியில்லை என்று இருதரப்பு வழக்கறிஞர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, அன்புமணி உயர் நீதிமன்றத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்து நீதிபதி அறைக்குள் சென்றார். டாக்டர் ராமதாஸ் உடல்நிலை காரணமாக வரமுடியவில்லை என்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தைலாபுரத்தில் இருந்து ஆஜராக அனுமதி கோர வேண்டும் என்றும் தனது வழக்கறிஞர் வி.எஸ்.கோபுவிடம் தெரிவித்தார்.
இதை வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்ததையடுத்து, ராமதாசை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக நீதிபதி அனுமதியளித்தார். இதைத்தொடர்ந்து அன்புமணியிடம் நீதிபதி தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரான ராமதாசிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அவர் தனது தரப்பு கருத்துக்களை நீதிபதியிடம் விளக்கினார். அப்போது, அறையில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை.
சுமார் 50 நிமிடங்கள் நடந்த இந்த விசாரணைக்கு பிறகு அன்புமணி தனது காரில் புறப்பட்டு சென்றார். அவரிடம் நிருபர்கள் பொதுக்குழு தொடர்பாக கேட்டதற்கு எந்த பதிலும் அளிக்காமல் புறப்பட்டார். இந்தநிலையில், நேற்று இரவு 8.45 மணிக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘நாளை(இன்று) நடைபெற உள்ள அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நிவாரணம் தேடி, உரிமையியல் நீதிமன்றத்தை அவர் அணுகலாம்’’ என்று உத்தரவிட்டார்.
* பொதுக்குழுவுக்கு தடையில்லை பாமக சொந்தங்களே வாருங்கள்: தலைவர் அன்புமணி அழைப்பு
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை, ‘‘மாமல்லபுரத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கும் பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் இன்று காலை 11 மணிக்கு பாமக பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாமக வளர்ச்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம். உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவும், ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காகவும் காத்திருக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே என குறிப்பிட்டுள்ளார்.