மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் பாமக தலைவராக அன்புமணியே தொடர்வார்: சட்ட வல்லுநர்களுடன் ராமதாஸ் ஆலோசனை
சென்னை: அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், மீண்டும் அன்புமணியை தலைவராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வரும் 17ம்தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். ராமதாசின் பொதுக்குழு அறிவிப்புக்கு எதிராக, அன்புமணி தரப்பில் போட்டி பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த பொதுக்குழுவிற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. ரிசார்ட்டுக்குள், பொதுக்குழுவில் கலந்துகொள்ள பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 3500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 2480 பேருக்கு மட்டுமே இருக்கைகள் போடப்பட்டிருந்தது.
சரியாக, 11 மணிக்கு பொதுக்குழு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 11 மணியை கடந்தும் இருக்கைகள் காலியாக காணப்பட்டது. அதன் பின்னர் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொன்றாக வந்தனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பொதுக்குழு நடைபெறும் ரிசார்ட் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. மேலும், நேரம் ஆக ஆக பொதுக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பலர் ஒரே நேரத்தில் குவிந்ததால், பாஸ் வாங்கும் இடத்தில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அரங்கம் முழுமையாக நிரம்பியது. இதை தொடர்ந்து, அன்புமணி மேடை ஏறியதும் தொண்டர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். அப்போது தொண்டர்களை பார்த்து கைகூப்பி அன்புமணி நன்றி தெரிவித்தார். பின்னர் குழந்தை ஒன்று மாம்பழத்தை அன்புமணியிடம் வழங்கியது. அதனை அவர் பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் அன்புமணி தலைமையில் நடந்தது.
இதில், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் வழக்கறிஞர் பாலு, 3 எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள் கலந்துகொண்டனர். ஏற்கனவே மாவட்ட தலைவர்களாக இருந்து, ராமதாசால் நீக்கப்பட்ட அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். பாமக பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு: பாமக உட்கட்சி தேர்தல்களை நடத்த ஓராண்டு அவகாசம் வழங்கப்படுகிறது.
2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சி தேர்தல்கள் நடத்தப்படும் வரை தலைவர் பதவியில் அன்புமணி, பொதுச் செயலாளர் பதவியில் ச.வடிவேல் ராவணன், பொருளாளர் பதவியில் ம.திலகபாமாவும் தொடர்வதற்கு பாமக பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது. வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதை செய்ய மறுத்தால், பாமக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கிறது.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 15ம்தேதி இந்திய விடுதலை நாள் விழாவில் தமிழக அரசு வெளியிட வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூடிய நிலையில் ராமதாசின் பொதுக்குழு வரும் 17ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பொதுக்குழுவிற்கு யாரெல்லாம் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தொடர்ந்து சட்ட வல்லுநர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
* காலியாக கிடந்த ராமதாஸ் நாற்காலி
அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்துக்கு ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவரது புகைப்படமும் பேனர்களில் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் பாமக நிறுவனர் ராமதாசுக்கு, அன்புமணி இருக்கைக்கு அருகிலேயே தனியாக இருக்கை ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ராமதாஸ் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கடைசி வரை அந்த நாற்காலி காலியாகவே இருந்தது.
* வீடியோ எடுத்த நிருபர் மீது தாக்குதல்
பொதுக்குழுவில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் மதிய உணவுக்காக கையில் தட்டு எடுத்துக் கொண்டு முண்டியடித்தனர். அப்போது, அதனை வீடியோ எடுத்த தனியார் தொலைக்காட்சி நிருபரின் செல்போனை பிடுங்கி வீடியோவை அழித்து, அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
* பசியுடன் திரும்பினர்
பொதுக்குழு கூட்டத்துக்கு, 3500 பேருக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், 2480 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தது. ஆனால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்ததால், கிட்டதட்ட 3 ஆயிரம் பேர் இருக்கைகள் இல்லாமல் வெளியே சுற்றி திரிந்தனர். மேலும் 3500க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 2,000 பேருக்கு மட்டுமே உணவு தயார் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கிட்டதட்ட, 3 ஆயிரம் பேர் மதிய உணவு இல்லாமல் பசியோடு திரும்பி சென்றனர்.
* ‘கோட்டையில் ராமதாசின் பேனாவில் கையெழுத்திடுவார்’ பாமக வழக்கறிஞர் பாலு பேச்சு
2026ம் ஆண்டு தேர்தலில் பாமக இடம்பெறும் அணி தான் தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், நான் ஒன்றை கூடுதலாக கூறுகிறேன். மாற்றம் - முன்னேற்றம் - அன்புமணி என்று 2016ம் ஆண்டு தமிழகம் முழுவதும் ராமதாஸ் அன்புமணியை அடையாளப்படுத்தி சேலத்தில் நடந்த தொடக்க விழா மாநாட்டில் ஒரு பேனாவை அவரிடம் கொடுத்து ‘‘நீ முதலமைச்சராகும் பொழுது இந்த பேனாவில் தான் கையெழுத்திட வேண்டும்’’ என ராமதாஸ் கூறியிருந்தார்.
நான் இன்றைக்கும் சொல்கிறேன். 2026ம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடன் கோட்டையில் அந்த பேனாவில் அன்புமணி கையெழுத்திடுவார். அது நிச்சயமாக நடந்தே தீரும். அதற்காக பாமக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என பாமக பொதுக்குழு கூட்டத்தில் வக்கீல் பாலு பேசினார்.
* பூம்புகாரில் இன்று மகளிர் மாநாடு அன்புமணிக்கு செக் வைக்க மகளுக்கு முக்கிய பதவியா? ராமதாஸ் திட்டம்
அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு நேற்று நடந்த நிலையில் பூம்புகாரில் பாமக, வன்னியர் சங்கம் சார்பில் இன்று (10ம்தேதி) மாலை 3 மணிக்கு மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கி பேசுகிறார். இதற்காக நேற்று தரங்கம்பாடி வந்தார். அங்கு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முக்கியமாக, அன்புமணிக்கு செக் வைக்கும் வகையில், மகள் காந்திமதிக்கு நிர்வாக குழுவில் முக்கிய பதவி அளிக்கலாம் என கூறப்படுகிறது.
அன்புமணியுடன் மோதல் ஏற்படுவதற்கு முன்புவரை கட்சியில் மகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்த ராமதாஸ், சமீப நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் அவரை பங்கேற்க வைத்து வருகிறார். சமீபத்தில் ராமதாஸ் தலைமையில் நடந்த மாவட்ட பொதுக்குழுவில் மேடையில் மகள் காந்திமதியை அமர வைத்து கவுரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பூம்புகார் மாநாட்டில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர் பங்கேற்பாரா என தெரியவில்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.