மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும்; 3வது ஆலை கட்டுமான பணி தீவிரம்: அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
இந்த ஆலையின் கட்டுமான பணிக்கு கடந்த 2023ம் ஆகஸ்ட் 21ம் தேதி தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், சுற்றுச்சுவர் கட்டுமான பணி, சுத்திகரிக்கப்பட்ட நீர்சேகரிப்பு தொட்டி, கசடுகளை கெட்டிப்படுத்தும் பிரிவு, நிர்வாக கட்டிடம், கடல் நீரை உட்கொள்ளும் கட்டமைப்பு, பண்டகசாலை, ஊடுருவி தொட்டி மற்றும் நடுநிலைபடுத்தும் தொட்டிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. அவ்வப்போது, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்துகின்றனர்.
இங்கு, சுத்திகரிக்கப்படும் குடிநீர் சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட கீழ்ப்பாக்கம், கே.கே.நகர், வேளச்சேரி, புதிய வேளச்சேரி, சூளைமேடு, நந்தனம், மயிலாப்பூர், போரூர், முகலிவாக்கம், மணப்பாக்கம், ஆலந்தூர் வள்ளுவர் கோட்டம், தாம்பரம் மாநகராட்சி 20 ஊராட்சிகளை சேர்ந்த மொத்தம் 22.67 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் நேற்று மாலை நேரில் வந்து சுத்திகரிக்கப்பட்ட நீர்சேகரிப்பு தொட்டி, கசடுகளை கெட்டிப்படுத்தும் பிரிவு, நிர்வாக கட்டிடம், கடல் நீரை உட்கொள்ளும் கட்டமைப்பு, பண்டகசாலை, ஊடுருவி தொட்டி, நடுநிலைபடுத்தும் தொட்டி மற்றும் கடல் நீரை கொண்டு வரும் ராட்சத குழாய்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆலை கட்டுமான பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து, 110 மில்லியன் லிட்டர் மற்றும் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வினய், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, மேற்பார்வை பொறியாளர் சாந்தி, செயற்பொறியாளர் கிருபாகரவேல், திருப்போரூர் தாசில்தார் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.