மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய பழங்கால கோயில் பலி பீடம் மீட்பு:தொல்லியல்துறை ஆய்வு
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய பழங்கால பலிபீடத்தை மீட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்தில் கடந்த 3 தினங்களாக பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால், கடல் வழக்கத்தைவிட 100 மீட்டர் முன்னோக்கி வந்து, அலை அடித்ததால் தனியார் ரிசார்ட்டுக்கு அருகே ஆங்காங்கே குளம்போல் கடல்நீர் தேங்கி நிற்கிறது.
கடந்த 7ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் பாறையை செதுக்கி 7 கோயில்கள் உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது. இந்த 7 கோயில்களில் 6 கோயில்கள் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. மீதமுள்ள ஒரே கோயிலான கடற்கரை கோயிலை மட்டும் தொல்லியல் துறையினர், கடல் அலை பாதிக்காதவாறு கோயிலை சுற்றிலும் கருங்கற்கள் கொட்டி கடல்நீர் உள்ளே வராமல் பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை தமிழ்நாடு ஓட்டல் அருகில் ஒரு அடி உயரம் கொண்ட பழங்கால கருங்கல் பலிபீடம் கரை ஒதுங்கியது. இதை அங்குள்ள மீனவ மக்கள், சுற்றுலா வந்த பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கடல் அலையில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய கருங்கல் பலிபீடம், கடலில் மூழ்கியதாக கூறப்படும் பழங்கால கோயிலின் பலிபீடமா? என தொல்லியல் துறையினர் மீட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மாமல்லபுரம் கடற்கரையில் பழங்கால கருங்கல் பலிபீடம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.