மாலியில் 5 தமிழர்கள் கடத்தல்: உடனடியாக மீட்க வெளியுறவு துறைக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை!
சென்னை: மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மற்றும் அல்-கொய்தா அமைப்புகளால் பல்வேறு இடங்களிலும் வன்முறை பரவி காணப்படுகிறது. அவர்கள் மக்களிடையே வன்முறையை பரப்புவதுடன், வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்துவதும், மிரட்டி பணம் பறிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில், 5 இந்தியர்களை ஆயுதம் ஏந்திய குழு ஒன்று கடந்த 6-ந்தேதி கடத்தி சென்றுள்ளது. மேற்கு மாலியின் கோப்ரி பகுதியருகே தனியார் மின் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இந்திய தொழிலாளர்கள் 5 பேரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர் கடத்தி சென்றனர்.
இந்நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவரான கனிமொழி எம்.பி., தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது; கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்கு ஆப்ரிக்கா - மாலி நாட்டில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மற்றும் தென்காசியை சேர்ந்த பொன்னுதுரை, புதியவன், பேச்சிமுத்து, இசக்கிராஜா மற்றும் தளபதி சுரேஷ் ஆகிய ஐந்து தொழிலாளர்கள், அந்த நாட்டிலுள்ள ஆயுத குழுவால் கடத்தப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடத்தப்பட்டிருக்கும் அத்தொழிலாளர்களை மீட்டு, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.