சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலம் பாதித்த ஆண் யானை 2 நாள் சிகிச்சைக்குப்பின் குணமானது
மேட்டுப்பாளையம்: சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலம் பாதித்த ஆண் யானைக்கு வனத்துறையினர் உரிய நேரத்தில் 2 நாள் சிகிச்சை அளித்ததால் குணமானது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகம் மோதூர் பெத்திக்குட்டை காப்பு காட்டுக்கு உட்பட்ட பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று சோர்வுடன் நிற்பதாக வனச்சரகர் மனோஜ் குமாருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையில் சென்ற வனத்துறையினர் புதர் பகுதியில் நின்றிருந்த யானையை கண்காணித்தபோது உடலில் எங்கும் காயங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
அந்த யானை அவ்வப்போது அருகில் கிடைக்கும் தீவனம் மற்றும் ஓடை நீரை பருகுவதுமாக இருந்தது. ஆனால் வேறு இடத்திற்கு நகராமல் சோர்வுடன் நின்றதை கண்டறிந்தனர். இதனையடுத்து இது குறித்து வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி யானையின் உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் வனக்கால்நடை மருத்துவ குழுவினருடன் இணைந்து முதற்கட்ட சிகிச்சையாக யானைக்கு தர்பூசணி மற்றும் வாழைப்பழம் மூலமாக ஆன்ட்டி பயாட்டிக் மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், குடற்புழு மாத்திரைகள் மற்றும் கல்லீரல் புத்துணர்வு வைட்டமின் டானிக் கொடுத்து வந்தனர்.
கடந்த 2 நாட்களாக அளித்த சிகிச்சையால் யானையின் உடல் நலம் தேறியது. இதையடுத்து இன்று அதிகாலை அருகில் இருந்த வாழை தோட்டத்திற்கு சென்ற யானை வாழைப்பயிர்களை முறித்து உண்டது. இது குறித்த வீடியோவை இன்று வெளியிட்ட வனத்துறையினர், யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கமாக நடந்து சென்று உணவு உட்கொள்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.