கோவை அருகே மின் கம்பத்தை சாய்த்தபோது மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி
தொண்டாமுத்தூர்: கோவை அருகே மின்கம்பத்தை சாய்த்ததில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை பலியானது. கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே மலையடிவார கிராமங்களான தாளியூர், கெம்பனூர், குப்பேபாளையம், வீராலியூர், நரசீபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வனத்தில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்து வந்து விசாரித்தனர்.
இதில், நேற்றிரவு விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை அங்குள்ள விவசாய பயிர்களை சாப்பிட்டுள்ளது. இன்று அதிகாலை அங்கிருந்து வெளியேறும்போது தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தை சாய்த்துள்ளது. இதில் மின் கம்பம் கீழே விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானது. இறந்த ஆண் யானைக்கு சுமார் 25 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த வாரம் இதே பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த ‘ரோலக்ஸ்’ யானையை வனத்துறையினர் 4 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.