அரசியல் பரபரப்புக்கு மத்தியில் மலேசியாவில் ராகுல் சுற்றுப் பயணம்: புகைப்படத்தை வெளியிட்ட பாஜக
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அல்லது தேர்தல் நேரங்களில் அமைவது, தொடர்ந்து பாஜகவின் விமர்சன இலக்காக இருந்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, ராகுல் காந்தி வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டிய பாஜக, எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் தனது பயண விவரங்களை வெளியிடாமல் இருப்பது தேசியப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புவதாகக் குற்றம்சாட்டியது.
பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் இதுகுறித்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்தச் சூழலில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ராகுல் காந்தி தற்போது மலேசியாவின் லங்காவிக்கு சுற்றுலா சென்றுள்ளார். சமீபத்தில்தான், அவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து பீகாரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை முடித்திருந்தார். இந்நிலையில், அவரது இந்தப் பயணம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மால்வியா, ராகுல் காந்தி தொப்பி மற்றும் அரைக்கால் சட்டை அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், ‘பீகார் அரசியலின் வெப்பமும், புழுதியும் காங்கிரஸ் தலைவருக்கு தாங்கவில்லை போலும், அதனால்தான் ஓய்வெடுக்க ஓடிவிட்டார். அல்லது யாருக்கும் தெரியாமல் நடக்கும் ரகசிய சந்திப்புகளில் இதுவும் ஒன்றா? பிரச்னைகளுடன் மக்கள் போராடிக்கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி காணாமல் போவதிலும், சுற்றுலா செல்வதிலும் கைதேர்ந்து வருகிறார்’ என்று விமர்சித்துள்ளார். பாஜகவின் இந்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் தரப்பிலும் கடுமையான பதிலடி விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.