11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 கோடி இழப்பீடு வழங்க சீன நீதிமன்றம் உத்தரவு!!
பெய்ஜிங் : மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 கோடி இழப்பீடு வழங்க சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777 ரகத்தை சேர்ந்த MH370 விமானம், கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி, நள்ளிரவு 12.41 மணிக்கு 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன், கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்டது. சரியாக நள்ளிரவு 1.19 மணியளவில் 'குட்நைட் மலேசியன் 370' என்று விமானி பேசியிருக்கிறார். அதுதான் விமானத்திலிருந்து வந்த கடைசி தகவல். தெளிவான வானிலை, தொழில்நுட்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, தரையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு என அனைத்தும் இருந்தபோதிலும் சில மணி நேரங்களில் விமானம் திடீரென காணாமல் போய்விட்டது.
காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். எனினும் அதில் இருந்தவர்களின் கதி என்ன என்பது இன்று வரை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் 11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அந்த விமானத்தை மீண்டும் தேட உள்ளதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதற்கிடையே விமானம் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பெய்ஜிங் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாயமான பயணிகள் அனைவருக்கும் தலா ரூ.3½ கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.