ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூகஅநீதி: அன்புமணி கண்டனம்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைக்கிராமங்களான ஈரட்டி, மின்தாங்கி, எப்பதான்பாளையம், கல்வாழை, கோவில்நத்தம், எண்ணமங்கலம், மலையனூர், குரும்பபாளையம், மேடுநல்லகவுண்டன்கொட்டாய், காளிமலை உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளி பழங்குடியின குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு பல தலைமுறையாக பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்களால் கல்வி கற்கவோ, அரசு வேலைக்கு செல்லவோ முடியவில்லை. அதனால், சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட அவர்கள் முன்னேற முடியாமல் தவிக்கின்றனர். மலையாளி பழங்குடியின மக்களுக்கு சாதிச்சான்றுகள் வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.
பழங்குடியினர் சாதிப்பட்டியலின் 25 ஆம் இடத்தில் மலையாளி பெயர் இடம்பெற்றுள்ளது. அவர்கள் தருமபுரி, சேலம், நாமக்கல், வேலூர், கரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வாழ்பவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதை மட்டும் உறுதியாகப் பிடித்துக் கொண்ட அதிகாரிகள், பிற மாவட்டங்களில் வாழும் மலையாளிகளுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். இது நியாயமல்ல. பர்கூர் பகுதியில் வாழும் மலையாளி பழங்குடியின மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் சமூகநிலையிலும், கல்வியிலும் முன்னேற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.