மலராத கட்சியில் நடந்த பூத் கமிட்டி மோசடியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘எந்த போராட்டமாக இருந்தாலும் தனது துணையுடனேயே களத்தில் இறங்கி அதிகாரிகளுடன் மோதுகிறாராமே மாஜி..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் அரசியல் கூத்துகளுக்கு பஞ்சமில்லையாம்.. ஏற்கனவே புல்லட்சாமி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அம்மணிக்கு திடீர் கல்தா கொடுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்று திரும்பியதும் விமான நிலையத்தில் தாலிபறிப்பு குறித்து குமுறினாராம்.. ஆனால் ஆளும் தரப்போ அம்மணியின் கூச்சலை பொருட்படுத்தவே இல்லையாம்..
இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் பதவி நீக்கத்துக்கு ஆளான மற்றொரு குமாரோ, தீவிர போராட்ட களத்தில் இறங்கி உள்ளாராம்.. கூட்டணியில் அங்கம் வகித்தாலும் புல்லட்சாமி அதிகாரிகளை கண்டித்து தினமும் போராட்டமும், கண்டன குரலும்தானாம்.. தொகுதி பணிகளுக்கு குரல் கொடுப்பதாக அதிகாரிகளுடன் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வரும் இவரைப் பற்றிதான் தற்போது புதுச்சேரி முழுக்க பரவலாக பேச்சாம்.. அதிலும் எந்த போராட்டமாக இருந்தாலும் தனது மனைவியுடனே செல்கிறாராம்..
இதனால் வரும் தேர்தலில் அவரையும் களத்தில் இறக்க மாஜி முடிவெத்து விட்டாரோ என்ற பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் அரசல் புரசலாக உலாவுகிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆதரவாளர்களை தட்டி தூக்க மாஜி அமைச்சர் ஸ்கெட்ச் போட்டு வேலை செய்றாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியில் நடந்து வரும் ‘பனிப்போர்’ அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாம்.. இலை கட்சியின் மாஜி அமைச்சரை ஓரங்கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும், இலை கட்சியின் மாஜி ‘பவர் புல்’ அமைச்சர் பார்த்து வருகிறாராம்..
அந்த வகையில், அடுத்தபடியாக, மாஜி அமைச்சரின் முக்கிய ஆதரவாளர்களை ‘குறி’ வைத்து, அவர்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் பவர்புல் அமைச்சர் இறங்கியுள்ளாராம்.. ஆதரவாளர்களை இழுத்து விட்டால், அவருக்கு இருக்க கூடிய செல்வாக்கும் வெகுவாக குறைந்து விடும். இனி, நம் கைதான் ஓங்கி இருக்கும் என பவர்புல் அமைச்சர் நினைக்கிறாராம்.. இந்த தகவல் அறிந்த மாஜி அமைச்சர், இந்த விவகாரத்தை தலைமைக்கு கொண்டு செல்ல முடிவு எடுத்துள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காக்கிகளின் மாமூல் வசூலால் அதிரடி மாற்றுதல் தொடங்கி இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்துல கனிம வள வாகனங்களை குறி வைச்சு, காக்கிகளின் மாமூல் வேட்டை தொடர் கதையாகி இருக்கிறதாம்.. காக்கி உயர் அதிகாரி கெடுபிடியான நடவடிக்கையால், இப்போது ஓரளவுக்கு உரிய அனுமதி சீட்டு, உரிய எடை அளவுடன் தான் கனிம வாகனங்கள் மாவட்டத்துக்குள் நுழைகிறதாம்.. சோதனை சாவடியில் பரிசோதனை செய்து, அனுமதி சீட்டில் டிக் வாங்கி உள்ளே வந்தாலும் சில ரோந்து போலீசார் அந்த வண்டியை நிப்பாட்டி, என்ன கவனிக்காம போறீங்க என கேட்டு ரூ.100, 200 வாங்கிட்டு தான் விடுகிறார்களாம்..
ரூ.200 போயாச்சுனா, அந்த லாரி டிரைவர் சம்பளத்தில் தான், ஓனர் கையை வைக்கிறாராம்.. சில சமயம் டிரைவர் தன்னிடம் ஒன்னும் பணம் இல்லை. ஓனர் கிட்ட தான் கேட்கணும் என்றால், உடனடியாக ஓனருக்கே போன் செய்து, ெகாஞ்சம் கவனிக்க சொல்லுங்க என கேட்டு பணம் கைக்கு வந்த பின்தான் வாகனத்தை விடுகிறார்களாம்.. செக்போஸ்டில் இருந்து முறையான ஆவணங்கள் இல்லன்னு, வண்டியை ஸ்டேஷனுக்கு அனுப்புனா, வழக்கு போடாம குறிப்பிட்ட தொகையை மாமூலாக வாங்கிட்டு, கமுக்கமாக வண்டியை அனுப்பி விடுகிறார்களாம்..
கேஸ் போட்டா 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ஆகும். எங்க கிட்ட அப்படி இல்லை என்று இவர்கள் சொன்னதும், கேட்ட மாமூல கொடுத்துட்டு வண்டிய எடுத்துட்டு போறாங்களாம்.. இப்படிப்பட்ட புகாரால, எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் காவல் நிலையங்களில் அதிரடி மாற்றத்துக்கு காக்கி உயர் அதிகாரி முடிவு செஞ்சு இருக்காராம்.. ஒருத்தர், 2 பேர் மட்டுமல்ல, கூண்டோட தூக்கி அடிச்சா தான் சரியாக வருவாங்க என்ற ரீதியில் இப்போது அதிரடி மாற்றுதல் தொடங்கி இருக்காம்..
5ம் நம்பர் காவல் நிலையத்துல தொடங்கிய இந்த நடவடிக்கை விரைவில் ஆறை நினைவுபடுத்தும் காவல் நிலையத்திலும் வர இருக்கிறதாம்.. இதை பெரிசாக வரவேற்றாலும், மாவட்ட தலைநகரிலும், காக்கிகள் சிலர் வசூல் வேட்டையில் உச்சத்துல இருக்கிறாங்களாம்.. உயர் அதிகாரி இவங்களையும் கவனிச்சு நடவடிக்கை எடுத்தா காவல் நிலையங்கள் கொஞ்சம் உருப்படும் என்று பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பூத் கமிட்டி அமைத்ததில் கூட மோசடி நடந்ததை கண்டுபிடித்து இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்ட மலராத கட்சியில் ஒரே மல்லுக்கட்டாம்.. இக்கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவராக மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் இருந்தார். இவரது பதவிக்காலத்தில் ஒரே வசூல் வேட்டைதானாம்.. இதற்காக எந்தெந்த வழிகளில் எல்லாம் போக வேண்டுமோ, அந்த வழிகளில் எல்லாம் புகுந்து புறப்பட்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இவர் மீது புகார்கள் வரிசை கட்டி வந்து நிற்க அவரை மாற்றிவிட்டு, சாமியின் பெயருடன் முடிபவரை புதிய மாவட்டத் தலைவராக நியமித்து இருக்காங்க.. இதன்பிறகு பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆய்வு சமீபத்தில் நடந்திருக்கு.. இதில், பழைய மாவட்டத் தலைவர் பதவி காலத்தில் பூத் கமிட்டி அமைத்ததில் கூட மோசடி நடந்தது தெரிய வந்துள்ளதாம்.. மலராத கட்சி மட்டுமல்ல...
கட்சி தாவி மற்ற கட்சிகளில் சேர்ந்துள்ள நிர்வாகிகள் பெயரையும் கணக்கில் காட்டி மிரள வைத்து இருக்காங்க.. இதுகுறித்து கேட்டபோது ஆய்வுக்கு வந்தவர்களுடன், பழைய தலைவர் ஒரே காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாங்க.,. இதனால் மேட்டர் கட்சியின் உயர்மட்ட அளவில் சென்றிருக்கு... இதனால், தன்னை கட்சியில் இருந்து கட்டம் கட்டி விடுவாரோ என பயந்த பழைய தலைவர், அல்வா மாவட்ட மாநில முக்கிய நிர்வாகியை சந்தித்து, அவரை தாஜா செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளாராம்.. இதுதான் பூட்டு மாவட்ட மலராத கட்சியில் இப்போதைய ஹாட் டாபிக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.