பெரும் விபத்தில் இருந்து சென்னை ரயில் எஸ்கேப்: அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்
மண்டபம்: மின்கம்பி துண்டிப்பால் சென்னை விரைவு ரயில் பாதி வழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சீரமைக்கப்பட்ட பிறகு மாலையில் மீண்டும் ரயில் சேவை துவக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே, இந்திய விமானப் படைக்கு சொந்தமான பருந்து விமானத்தளம் அருகே ராமேஸ்வரத்திற்கு செல்லும் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை செல்கிறது. விமானத்தளத்தின் பாதுகாப்பு கருதி இந்த பகுதியில் மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை.
பூமிக்குள் மின் கேபிள் பதிக்கப்பட்டு 224 மீட்டர் பகுதியை குறைந்த வேகத்தில் கடந்து செல்லும். நேற்று காலையில் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த ராமேஸ்வரம் விரைவு ரயில், பருந்து விமான பகுதியை காலை 7.10 மணிக்கு கடந்தபோது, ரயில் இன்ஜினின் மேல் மின்சார கம்பியை உரசி கொண்டு செல்லும் பேன்ட்ரோம் கருவி கீழே இறக்கப்பட்டு ரயில் இயக்கப்பட்டது.
ரயிலின் ஓட்டுநர் குறிப்பிட்ட இந்த 224 மீட்டர் பகுதியைக் கடந்து விட்டதாக கருதி, 214 மீட்டர் தூரத்திலேயே மின் கம்பியை உரசும் கருவியை மீண்டும் இயக்கியுள்ளார். இதனால் 10 மீட்டர் தூரத்தில் இருந்த இரும்புத்தடுப்பில் அந்த கருவி பலமாக மோதியது. மோதிய வேகத்தில் ரயில் பாதையில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.
மின் கம்பிகள் அறுந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெரும் விபத்திலிருந்து ரயில் தப்பியது. இதனால் அப்பகுதியில் மூன்று மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து டீசல் இன்ஜின் கொண்டு வரப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு காலை 10.55 மணிக்கு சென்றது. 7.55 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய ரயில் 3 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுபோல மதுரையில் இருந்து காலையில் புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு 10.30 மணிக்கு வரவேண்டிய பாசஞ்சர் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய பயணிகள் அவதிப்பட்டு பேருந்து மூலம் ராமேஸ்வரத்திற்கு வந்து சேர்ந்தனர். மின்கம்பிகள் சீரமைக்கப்பட்ட பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு புறப்பட்ட தாம்பரம் ரயில் சென்னைக்கு சென்றது.